LOADING...
"பிரட் சாப்பிட்டா உடம்பு போடுமா?" காலை உணவில் பிரட் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்
காலை உணவில் பிரட் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்

"பிரட் சாப்பிட்டா உடம்பு போடுமா?" காலை உணவில் பிரட் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகளும் தீமைகளும்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 09, 2026
12:26 pm

செய்தி முன்னோட்டம்

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்களின் காலை உணவில் பிரட் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள பிரட், உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை வழங்குகிறது. குறிப்பாக, முழு தானிய பிரட் சாப்பிடும்போது அதிலுள்ள சிக்கலான கார்போஹைட்ரேட்கள் மற்றும் நார்ச்சத்து மெதுவாக செரிமானமடைந்து, நீண்ட நேரம் உங்களைப் பசியின்றி வைத்திருக்க உதவும். அதேபோல், பிரட்டில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்சனைகளைக் குறைக்கவும், உடல் எடையை நிர்வகிக்கவும் துணைபுரிகிறது.

வெள்ளை பிரட் vs முழு தானிய பிரட்

இரத்த சர்க்கரை அளவின் தாக்கம்

நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரட் வகையைப் பொறுத்தே அதன் ஆரோக்கியப் பலன்கள் அமையும். மைதாவால் தயாரிக்கப்படும் வெள்ளை பிரட் (White bread) அதிக கிளைசெமிக் குறியீட்டைக் (High Glycemic Index) கொண்டது. இதனைச் சாப்பிடும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு மிக வேகமாக உயர்ந்து பின்னர் சட்டெனக் குறையும், இது உங்களுக்கு மீண்டும் பசியை உண்டாக்கும். ஆனால், முழு தானிய பிரட் இரத்த சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. தொடர்ந்து வெள்ளை பிரட் உட்கொள்வது இன்சுலின் எதிர்ப்புத் திறனை அதிகரித்து, இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கான (Type 2 Diabetes) அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

ஊட்டச்சத்து

இதய ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துப் பலன்கள்

முழு தானிய பிரட்டில் வைட்டமின் பி, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றன. மாறாக, அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட (Processed) பிரட் வகைகளில் சர்க்கரை, ஆரோக்கியமற்ற கொழுப்பு மற்றும் அதிகப்படியான சோடியம் சேர்க்கப்பட்டிருக்கும். இவை நீண்ட கால அடிப்படையில் இதயத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, பிரட் மட்டுமே எடை அதிகரிப்புக்குக் காரணம் அல்ல. நாம் உட்கொள்ளும் அளவு மற்றும் அதனுடன் எவற்றை சேர்த்து சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம்.

Advertisement

உட்கொள்ளும் முறை

பிரட்டை ஆரோக்கியமாக உட்கொள்ளும் எளிய வழிகள்

தினமும் பிரட் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதனை இன்னும் சத்தானதாக மாற்றலாம். எப்போதும் 'ஹோல் வீட்' (Whole-wheat) அல்லது முழு தானிய பிரட்டையே தேர்வு செய்யுங்கள். பிரட்டுடன் புரதச்சத்து நிறைந்த முட்டை, பீனட் பட்டர் அல்லது தயிர் போன்றவற்றைச் சேர்த்துச் சாப்பிடலாம். அதேபோல், அவகேடோ அல்லது நட்ஸ் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளையும், காய்கறிகள் அல்லது பழங்களையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஒரு முழுமையான ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவைப் பெற முடியும். குளுட்டன் (Gluten) சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் மட்டும் பிரட் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

Advertisement