தமிழகத்தில் அதிகரிக்கும் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல்; அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
"ஸ்க்ரப் டைபஸ்" எனப்படும் பாக்டீரியா தொற்று, தமிழகத்தில் பரவிக் கொண்டிருப்பதாக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூா், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் "ஸ்க்ரப் டைபஸ்" பரவல் அதிகரித்துள்ளது.
அதேபோல், கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் இதுபோன்ற பாதிப்புகள் காணப்படுகின்றன.
இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறும், இந்த தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்பட்டதும், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரணம்
இந்த நோய் தொற்றுக்கான காரணம்?
இந்த நிலைமையைப் பற்றி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "ரிக்கட்ஸியா" என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகள், பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது இந்த "ஸ்க்ரப் டைபஸ்" நோய் தாக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் இது மனிதர்களிடம் இருந்து மனிதருக்கு பரவாது.
விவசாயிகள், புதர் மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள மக்கள், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பூச்சி கடிக்க கூடிய சூழல்களில் இருக்கும் நபர்களுக்கு, இந்த நோயின் பாதிப்புகள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
அறிகுறிகள்
இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் ஆகிய அறிகுறிகள் இந்நோயின் முக்கிய தன்மைகள் ஆகும்.
வீரியத்தை பொறுத்து, உடல்வலி, தசைவலி, கடித்த இடத்தில் கருமையான சிரங்கு போன்ற பகுதி, மன மாற்றங்கள், விரிவாக்கப்பட்ட நிணநீர் கணுக்கள், சொறி, வியர்த்தல், கண்களில் ரத்தம், நுரையீரல் தொற்று, வாந்தி, மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் தோன்றக்கூடும்.
சிகிச்சை
சிகிச்சை முறைகள் இவை தான்
"ஸ்க்ரப் டைபஸ்" காய்ச்சலுக்கு உள்ளானவர்களுக்கு "அசித்ரோமைசின்", "டாக்ஸிசைக்ளின்" போன்ற ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள் அளித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
அதன் பிறகும், உடல் நிலை மேம்படாவிட்டால், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், ரத்த நாளம் மூலம் திரவ மருந்துகளை செலுத்தி, உயர் சிகிச்சை வழங்க வேண்டும்.
தேவையெனில், உயர் சிகிச்சை மையங்களில் நோயாளிகளை அனுமதிக்க வேண்டும்.
இந்த வழிகாட்டுதலின் அடிப்படையில், "ஸ்க்ரப் டைபஸ்" பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிப்பதை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.