மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது!
மேற்கு வங்காளத்தின், புருலியா மாவட்டத்தில், ராஞ்சி கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ஷிலா-முரி பிரிவில் உள்ள ஒரு ரயில்வே ஸ்டேஷனலில் பேய் உலவுவதாக, 42 ஆண்டுகளாக செயல்பாடற்று கிடக்கிறது என உங்களுக்கு தெரியுமா? திகில் படங்களில் மட்டுமே கேள்விப்படும் இது போன்ற செய்திகள், நடைமுறையிலும் இருக்கிறது என்ற செய்தி தற்போது வைரலாகி வருகிறது. அந்த 'பேய்' நடமாடும் ஸ்டேஷன் பெயர் பெகுன்கோடர். அந்த ரயில் நிலையத்தில் பேய் இருப்பதாக ஊருக்குள் செய்தி உலவுவதை அடுத்து, அந்த ஸ்டேஷனுக்கு யாருமே பணி செய்ய செல்வதில்லையாம். அதேபோல அங்கு பணிக்கு செல்ல ஒருவரும் சம்மதிக்கவில்லையாம். அதனால், கிட்டத்தட்ட 42 ஆண்டுகளாக, அந்த ரயில் நிலையம் மூடப்பட்டு உள்ளது.
பரபரப்பான ஸ்டேஷனில் பேய் வந்தது எப்படி?
கோப்புகளின்படி, இந்த ரயில்நிலையம், 1960-களில் ஒரு பரபரப்பான நிலையமாக தான் இருந்துள்ளது. சந்தலின் ராணி லச்சன் குமாரியின் முயற்சியால், ஊர்மக்களின் வசதிக்காக இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டது. தகவல்கள்படி, 1967-ஆம் ஆண்டில், இந்த நிலையத்தின் அப்போதைய ஸ்டேஷன் மாஸ்டர், ரயில் பாதையில் ஒரு பேய் உருவத்தை பார்த்ததாகக் கூறியுள்ளார். ஸ்டேஷன் மாஸ்டரின் கூற்றுப்படி, அந்த பேய் உருவம், வெள்ளைநிற சேலை அணிந்திருந்தது. அதோடு, அந்த ரயில் பாதையில் உலவி கொண்டிருந்தது. இந்த வதந்தி, அப்பகுதி முழுவதும் வேகமாக பரவியது. மேலும் சில விஷமிகளும் அதே போல கூறவே, ஊர் மக்கள், அதை நம்ப ஆரம்பித்துவிட்டனர்.