காளான்களின் மருத்துவ நன்மைகள்
மண்ணில் வளரக்கூடிய பூஞ்சையான காளான்கள், இயற்கையாக மற்றும் செயற்கையாக பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. உலகில் 1,600 வகை காளான்கள் இருந்தாலும் அவற்றில், 100 வகைகள் மட்டுமே உண்ணத் தகுந்தவையாக வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும் 33 வகை காளான்கள் உலகம் முழுவதும் உணவிற்காக பயிரிடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பல கலாச்சாரங்களில் காளான் ஆழமான பிணைப்பை கொண்டுள்ளது. ரோமானியர்கள் காளான்களை "கடவுளின் உணவு" என அழைத்தனர். சீனர்கள் காளான்களை அமுதுக்கு நிகராக பாவித்தனர். மனிதர்களுடன் புராதான தொடர்பை கொண்டுள்ள காளான்களில், குறைவான கலோரிகளும், உடலுக்கு தேவையான பல விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளது. அந்த வகையில் காளான்களின் மருத்துவ குணங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட காளான்கள்
காளான்கள் அழற்சி எதிர்ப்பு உணவுகளில் முதன்மையானவை. உடலில் நாள்பட்ட அழற்சியானது தன்னுடல் எதிர்ப்பு நிலைகள், இதய நோய், புற்றுநோய்கள் மற்றும் அல்சைமர் போன்ற நரம்புத் தளர்ச்சி நோய்கள் உட்படநோய்களுடன் தொடர்புடையது. காளான்களில் காணப்படும் பல உயிர்வேதியியல் சேர்மங்கள், அழற்சி எதிர்ப்பு விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. இது பல நோய்களுக்கு எதிராகவும் பாதுகாப்பை வழங்குகிறது. இவற்றில் உள்ள பீட்டா-குளுக்கன்கள் சைட்டோகைன்கள் எனப்படும் அழற்சி-சார்பு சேர்மங்களைக் கட்டுப்படுத்துகிறது.
நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படலாம்
காளான்கள் குறைந்த கலோரிகள் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இது ஒரு உணவை உட்கொண்ட பிறகு இரத்த சர்க்கரை எவ்வளவு விரைவாக உயர்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆராய்ச்சி குறைவாக இருந்தாலும், காளான்களில் உள்ள இயற்கையான கலவைகள், செரிமானப் பாதையிலிருந்து இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் (சர்க்கரை) உறிஞ்சப்படுவதைத் தடுப்பதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இதன் மூலம் நீரழிவு நோய்க்கு எதிராக செயல்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடல் பருமனை குறைக்க உதவுகிறது
காளான்கள் உடல் பருமனை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆராய்ச்சிகளின் மூலம், இது காளான்களின் அழற்சி எதிர்ப்பு விளைவுகளின் காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடையை சாதகமாக பாதிக்கும் பல அம்சங்களை காளான் கொண்டுள்ளது. காளான்களில் கலோரிகளில் குறைவாக உள்ளன. மெல்ல அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது, மேலும் அவற்றின் திரவம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை வயிற்றைக் காலியாக்குவதை மெதுவாக்குகின்றன மற்றும் மனநிறைவு உணர்வுகளை அதிகரிக்கின்றன. கூடுதலாக, காளான்கள் குடல் நுண்ணுயிரிகளின் உருவத்தை மாற்றியமைப்பதாகவும், உடல் பருமனுக்கு எதிரான குடல் பாக்டீரியாக்களின் அளவை அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
புற்று நோய்க்கு எதிராக பாதுகாப்பு வழங்கலாம்
காளான்கள் புற்றுநோயைத் தடுக்கும் மற்றும் அதன் வளர்ச்சியைக் குறைக்கும் திறனுக்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. சமீபத்திய ஆராய்ச்சி மதிப்பாய்வு, உண்ணக்கூடிய காளான்கள் புற்றுநோயை உருவாவதையும், வளர்வதையும், பரவுவதையும் தடுக்கலாம் எனவும், மேலும் புற்றுநோயிலிருந்து மீண்டு வரும்பொழுது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முந்தைய ஆய்வுகளின் படி, காளான்களை உண்பது மார்பக புற்று நோய் உண்டாவதற்கு நேர் எதிரான விளைவை கொண்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் கலவையான தரவுகளை கொண்டிருந்தாலும், தினமும் ஒரு கிராம் காளான் உட்கொள்வது, மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை 3% குறைப்பதாக கூறப்படுகிறது.
மனச்சோர்வு அபாயத்தை குறைக்கிறது
காளான்களில் வைட்டமின் பி12, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை உட்பட கவலைக் குறைப்புடன் தொடர்புடைய எண்ணற்ற உயிர்வேதியியல் கலவைகள் இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளது. இந்த ஆராய்ச்சியானது 2005-2016 ஆம் ஆண்டுகளிடையே, தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை ஆய்வின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது, அமெரிக்காவில் 25,000 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் படி, காளான்களை உட்கொள்பவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் அபாயம், காளான்களை உட்கொள்ளாதவர்களுக்கு ஏற்படும் அபாயத்தை விட குறைவாக உள்ளதை கண்டறிந்துள்ளனர்.