விமானத்தில் பறக்க பயமா? இந்த டிப்ஸ்-களை கடைபிடிக்கலாம்
நடுவானில், கடல் மட்டத்திலிருந்து இருந்து 12,000 அடி உயரத்தில், ஒரு பெட்டிக்குள் உங்களை அடைத்து வைத்திருப்பது போல உணருகிறீர்களா?அப்படி என்றால், விமானத்தில் பறப்பதை எண்ணி பதற்றம் அடைகிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் பதற்றத்தை போக்க சில குறிப்புகள் இங்கே: சுவாச பயிற்சி செய்யுங்கள்: கவனம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உங்கள் எண்ணங்களை, சுவாசத்தை நோக்கி ஒருமுகப்படுத்துங்கள். மெதுவான, ஆழமான சுவாசத்தை பயிற்சி செய்வதன் மூலம், உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தவும், பதட்டத்தைக் குறைக்கவும் முடியும். மூக்கின் வழியாக மெதுவாக காற்றை உள்ளிழுத்து, சில நொடிகள் உங்கள் மூச்சைப் பிடித்து, பின்னர் வாய் வழியாக மெதுவாக வெளிவிடவும். ஆழ்ந்த சுவாசம், உங்கள் மூளைக்கு, ஆக்ஸிஜன் சப்ளை அதிகரிக்கிறது, அதனால் நரம்புகள் அமைதியடைகின்றன.
எதிர்மறை எண்ணங்களை விலக்கி, மனதை ஒருநிலைப்படுத்துங்கள்
மனதை நிலைநிறுத்துங்கள்: உங்கள் மனஎண்ணங்களை அலைபாய விடாமல், மனதை ஒருநிலை படுத்தும் பயிற்சியை மேற்கொள்ளலாம். உதாரணமாக, நீங்கள் பார்க்கக்கூடிய ஐந்து விஷயங்கள், நீங்கள் கேட்கக்கூடிய நான்கு விஷயங்கள், நீங்கள் தொடக்கூடிய மூன்று விஷயங்கள், நீங்கள் நுகரக்கூடிய இரண்டு விஷயங்கள் மற்றும் நீங்கள் சுவைக்கக்கூடிய ஒரு விஷயத்தின் மீது கவனம் செலுத்துங்கள். எதிர்மறை எண்ணங்களிலிருந்து திசை திருப்புங்கள்: பதட்டமான நேரங்களில், எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். அத்தகைய எண்ணங்களில் இருந்து, உங்கள் மனதை திசை திருப்ப முயற்சியுங்கள். விமான பணிப்பெண்ணிடம் பேசுங்கள்: இத்தகைய சூழ்நிலைகளை கையாள விமானப் பணிப்பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் கவலையாக உணர்ந்தால், உங்கள் அருகில் உள்ள விமானப் பணிப்பெண்ணுக்கு தெரியப்படுத்தவும். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.