பொது மேடையில் பேசுவதற்கு பயமா? இந்த டிப்ஸ்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்
பொது வெளியில் பேசுவதற்கு ஏற்படும் பதட்டமும், பயப்படும் தன்மையையும், மருத்துவத்துறையில், 'குளோசோஃபோபியா' என குறிப்பிடுகிறார்கள். இந்த பயத்தின் போது கை நடுக்கம், குரலில் நடுக்கம், அதீத பதட்டம் ஆகியவை ஏற்படும். நீங்கள் இந்த பயத்தால் பாதிக்கப்படுபவர்களாக இருந்தால், இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவும். உங்கள் நம்பிக்கையை வளர்த்து, முன்கூட்டியே தயாராகுங்கள்: இவ்வகை ஃபோபியா இருப்பவர்கள், மேடையில் பேசும்போது, முக்கியமானதை சொல்ல மறந்துவிடுவோமோ அல்லது தவறாகப் பேசிவிடுவோமோ என்று பயப்படுவார்கள். இதை கையாள்வதற்கான சிறந்த வழி, உங்கள் தலைப்பை நன்கு அறிந்து புரிந்துகொள்வதாகும். உங்களுக்குத் தெரிந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்து, முக்கிய குறிப்புகளை நோட் செய்து, உங்கள் உரையை எழுதவும். இது உங்கள் நம்பிக்கையை வளர்க்கவும் உதவும்.
மனஅழுத்தத்தை குறைக்க சுவாச பயிற்சி
இறுதி நாளுக்கு முன், ரீஹெர்சல் செய்து கொள்ளுங்கள்: நீங்கள் பேச வேண்டிய பேச்சை, பலமுறை பயிற்சி செய்வது, உங்கள் நம்பிக்கையை உயர்த்தும். கண்ணாடி முன் நின்று, உங்கள் பேச்சைப் படியுங்கள். உங்கள் குரல் மற்றும் தொனியைக் கேட்டு, அதற்கேற்ப மாற்றங்களைச் செய்யுங்கள். நம்பகமான நண்பருக்கு முன்பாகவும் நீங்கள் பயிற்சி செய்யலாம். மன அழுத்தத்தைக் குறைக்கவும்: நீங்கள் மேடையேறும் முன்னர், உங்களை ஆசுவாசப்படுத்த ஆழமாக சுவாசிக்கவும். நீங்கள் ஒரு சிறந்த பேச்சை வழங்கப்போவதாக கற்பனை செய்து, எதிர்மறை சிந்தனைகளை விலக்குங்கள். பார்வையாளர்களுடன் கலந்து பேசுங்கள்: நீங்கள் உரையாற்றத் தயாராகும் முன், உங்கள் பயத்தைக் குறைக்க பார்வையாளர்களுடன் சகஜமாக பேசுங்கள். உங்களுக்கு பரிச்சையமானவர்கள் முன் மேடையில் பேசுவது, உங்களுக்கு தைரியத்தை தரும். உங்கள் பதட்டமும் குறையும்.