யோகா: பதட்டமாய் உணருகிறீர்களா? இந்த சுவாசப் பயிற்சிகளை முயற்சிக்கவும்
பிறப்பு முதல் இறப்பு வரை, நம் உடல், தன்னிச்சையாக செய்யும் ஒரு செயல் 'சுவாசிப்பது'. முறையான, கட்டுப்படுத்தப்பட்ட சுவாசப் பயிற்சி உங்கள் உடலையும், மனதையும் சமநிலைக்கு கொண்டுவர உதவுகிறது. நீங்கள் பதட்டமாக உணரும் நேரத்தில், சில மூச்சு பயிற்சிகளை செய்வதனால், உங்கள் பதட்டம் குறையும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றது. அவை: நீட்டிக்கப்பட்ட சுவாசம்: மெதுவாக காற்றை உள்ளிழுத்து, நுரையீரல் முழுவதும் நிரம்பியதும், அதைவிட மெதுவாக, காற்றை வெளியிடவும். இந்த பயிற்சியை, 3-5 முறை மீண்டும் செய்யவும். அதிர்வலை (Resonant) சுவாசம்: தரையில் படுத்துக்கொண்டு, கண்களை மூடி, காற்றை உள்ளிழுக்கவும். உங்கள் நுரையீரல் பாதி நிரம்பியதும், மெதுவாக காற்றை வெளியிடவும். ஐந்து வினாடிகள் காற்றை உள்ளிழுத்தால், ஆறு வினாடிகள் வரை காற்றை வெளியிடவும்.
மனதை சீராக்கும் மூச்சு பயிற்சிகள்
'சிங்க கர்ஜனை' மூச்சு பயிற்சி: அமர்ந்த நிலையில், மூக்கின் வழியே காற்றை உள்ளிழுத்து, மூச்சை அடக்கி கொள்ளுங்கள். பின்னர், வாயை அகலமாக திறந்து, நாக்கை வெளியே நீட்டி, வாய் வழியே காற்றை வெளியேற்றவும். நீங்கள் மூச்சை வெளியேற்றும்போது, "ஹா" என்ற ஒலியை எழுப்பவும். வாய் வழி சுவாசம்: அமர்ந்த நிலையில், நாசி வழியே மெதுவாக சுவாசிக்கவும். பின்னர், வாயை குவித்து, மெதுவாக வாய் வெளியே சுவாசத்தை வெளிவிடவும். சூடான பானத்தில் ஊதுவது போல், வாய் வழியே காற்றை வெளிவிடவும். சீரான சுவாசம்: கண்களை மூடிக்கொண்டு, சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். காற்றை உள்ளிழுக்கும்போது, வினாடிகளை எண்ணவும். பின்னர், உங்கள் நாசி வழியாக வெளியேற்றும்போது, அதே வினாடிகள் மெதுவாக சுவாசத்தை வெளிவிடவும்.