ராஜ ராஜ சோழனின் சமாதி இருப்பது உண்மையா? எங்கே இருக்கிறது?
தஞ்சையை ஆண்ட சோழ சக்கரவர்த்தி, அருள்மொழி வர்மன் என்று அழைக்கப்பட்ட ராஜ ராஜ சோழனின் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் செழிப்பாக வளர்ந்தது என வரலாற்று சான்றுகள் உள்ளன. அந்த சரித்திர நாயகனின் பிறந்த நாளை ஆண்டு தோறும், தமிழ் மாதமான ஐப்பசியில் (அக்டோபர்-நவம்பர்) சதய நட்சத்திரத்தன்று, சதய விழாவாக கொண்டாடுவது வழக்கம். இது தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள அனைவருக்குமான ஒரு நாளாக பார்க்கப்படுகிறது. அதோடு தஞ்சை மக்களுக்கு இது ஒரு திருவிழாவாகும். இத்தகைய பெருமை கொண்ட ராஜ ராஜ சோழனின் சமாதி எங்குள்ளது என பல கதைகள் உள்ளது. ராஜராஜனின் மறைவு பற்றியும் பல செய்திகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த கட்டுரையில் ஒரு பார்வை.
பொன்னியின் செல்வரின் பள்ளிப்படை இருப்பதாக கண்டறிந்தது யார்?
கும்பகோணத்தில் உள்ள உடையாளூரில் உள்ள ஒரு சிறிய கொட்டகையில் ராஜ ராஜ சோழனின் சமாதி இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதற்குக் காரணம், 2000-களின் முற்பகுதியில், மைசூர் கல்வி நிறுவனத்தில் தமிழ்ச் செப்பேடுகளின் ஆய்வில், அவரது (ராஜ ராஜ சோழன்) பேரன் குலோத்துங்கன் ஆட்சியில் ராஜ ராஜாவின் நினைவிடத்தைப் புதுப்பித்ததைப் பற்றி குறிப்பிட்ட ஒரு கல்வெட்டை உடையாளூரில் கண்டறிந்தனர். இந்த கல்வெட்டு கொண்ட தூண் உடையாளூரில் உள்ள ஒரு அம்மன் கோவிலின் நுழைவாயிலில் கண்டெடுக்கப்பட்டது. ராஜ ராஜாவின் 'பள்ளிப்படை' குறிக்கக்கூடிய சிவன் கோவில் அல்லது 'லிங்கம்' என்று ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியில் தேடினார்கள். அதன்படியே உடையாளூரில் உள்ள ஒட்டத்தோப்பில் பாதி புதையுண்ட 'லிங்கம்' தான் அவரது சமாதியாக இருக்கமுடியும் என்று அவர்கள் முடிவு செய்தனர்.
மன்னர்களின் நினைவாக சிவலிங்கம் வைத்து வழிபாடு
வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, பண்டைய காலங்களில், ஒரு ஆட்சியாளரின் சாம்பலை மண்ணில் புதைத்து, அதன் மேல் ஒரு சிவலிங்கத்தை நிறுவுவதன் மூலம், அந்த இடத்தை பள்ளிப்படை(புதைக்கப்பட்ட இடம்) என குறிக்கும் வழக்கம் இருந்தது. பின்னர் அது பிரதிஷ்டை செய்யப்படும். இந்த பாரம்பரியம் மறைந்த ஆட்சியாளர்களை கௌரவிப்பதிலும் நினைவுகூருவதிலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இங்கே பெரிய மணிமண்டபம் போல காட்டுவதால், பிரயாணிகள் இளைப்பாறவும் முடியும். ராஜ ராஜ சோழனின் சமாதியாக இது இருக்கும் என்பதற்கு மற்றுமொரு முக்கிய ஆதாரம், இந்த இடம் இடைக்கால சோழர்களின் பண்டைய தலைநகரான பழையாறைக்கு அருகாமையில் உள்ளது. மேலும், ராஜ ராஜ சோழனின் மனைவி, பஞ்சவன் மாதேவியின் பள்ளிப்படை, இந்த இடத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் பட்டீஸ்வரத்தில் உள்ளது.
அருண்மொழியின் மரணம் குறித்த விவாதங்கள்
உடையாளூரில் உள்ள பள்ளிப்படை மற்றுமின்றி கைலாசநாதர் கோயில் கூட ராஜராஜனின் பள்ளிப்படையாக இருக்கலாம் என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். இக்கோயிலில் கருவறைக்கு வெளியே சுவரில் சிவபெருமானின் காலடியில் துறவி அமர்ந்திருப்பதைக் காட்டும் தனித்துவமான சிற்பம் உள்ளது. இது ராஜ ராஜ சோழன் தான் எனவும் சில கூற்றுகள் உண்டு. மர்மம் அவரது சமாதி பற்றியது மட்டுமல்ல. அவர் எப்படி இறந்தார் என்பது பற்றியும்!
அருண்மொழியின் இறப்பை சுற்றியுள்ள மர்மங்கள்
கிபி 1013 ஆம் ஆண்டின் இறுதியில் திருவிசைநல்லூரில் உள்ள ஒரு சிவன் கோயிலில் ராஜ ராஜாவும், அவரது மனைவி லோகமாதேவியும் 'ஹிரண்ய கர்ப்பம்' மற்றும் 'துலாபார' சடங்குகளை செய்ததாக பதிவு உள்ளது. இது துறவறம் மேற்கொள்ளும் முன்னர் செய்யப்படும் சடங்காகும். அதன் பின்னர் அவர் துறவறம் மேற்கொண்டு உடையாளூரில் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மறுபுறம், அவர் தஞ்சை பெரியகோவிலின் கோபுரத்தின் மேல் இருந்து தவறி விழுந்து இறந்ததாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாக இருப்பினும், ராஜ ராஜ சோழன் ஒரு சிறந்த ஆட்சியாளர் என்பதை மறுப்பதற்கில்லை. அவரின் சதய விழா வரும் நவம்பர் 10 அன்று தொடங்குகிறது. அந்நாளில் அவரை நினைவுகூருவோம்!