வியர்வையும் ஒரு எச்சரிக்கைதான்! தலை, உள்ளங்கை என குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அதிகம் வேர்ப்பது ஏன்? இதோ காரணங்கள்
செய்தி முன்னோட்டம்
வெப்பமான சூழ்நிலையிலோ அல்லது கடினமான உடற்பயிற்சியின் போதோ வியர்ப்பது இயல்பானது. ஆனால், எந்தக் காரணமும் இன்றி அதிகப்படியாக வியர்ப்பது உங்கள் உடல் உங்களுக்கு விடுக்கும் ஒரு சமிக்கையாக இருக்கலாம். மருத்துவ ரீதியாக இதனை ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்று அழைப்பார்கள். உங்கள் உடலில் எங்கே, எப்படி வியர்க்கிறது என்பதை வைத்து உங்கள் ஆரோக்கியத்தைக் கணிக்க முடியும். உங்கள் வியர்வை பேட்டர்ன் (pattern) உணர்த்தும் 5 முக்கியமான ஆரோக்கிய எச்சரிக்கைகளை இதில் பார்க்கலாம்.
தூக்கத்தில் ஜாக்கிரதை
இரவு நேர வியர்வை
ஏசி அல்லது ஃபேன் ஓடிக்கொண்டிருக்கும் போதும், இரவு தூக்கத்தில் உடல் நனையும் அளவிற்கு வியர்க்கிறதா? இது பெரும்பாலும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு இது பொதுவானது. சில சமயங்களில் இது உடலில் ஏதேனும் தொற்று அல்லது தைராய்டு பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம். தூக்கத்தில் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பவர்களுக்கும் இவ்வாறு நிகழலாம்.
இதயத்தின் எச்சரிக்கை
திடீர் குளிர் வியர்வை
வெப்பம் இல்லாத போது உடல் சில்லிட்டுப் போய் வியர்ப்பது ஆபத்தானது. மார்பு பகுதியில் பாரம் அல்லது இடது கையில் வலி இருக்கும் போது குளிர் வியர்வை ஏற்பட்டால், அது இதயத் தசை அழற்சி அல்லது மாரடைப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இது போன்ற சூழலில் தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாடுவது உயிரைக் காக்கும்.
உள்ளங்கை
உள்ளங்கை மற்றும் பாதங்களில் வியர்வை
பதட்டமாக இருக்கும் போது அல்லது தேர்வு எழுதும் போது பலருக்கு உள்ளங்கைகள் நனையும். இது பிரைமரி ஃபோக்கல் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் நரம்பு மண்டலத்தின் அதீத செயல்பாட்டினால் ஏற்படுகிறது. மன அழுத்தம் மற்றும் அதீத பயம் உள்ளவர்களுக்கு இது அதிகமாகக் காணப்படும்.
உணவு
உணவருந்தும் போது வியர்வை
காரமான உணவுகளைச் சாப்பிடும் போது நெற்றியில் வேர்ப்பது இயல்பு. ஆனால், சாதாரண உணவைச் சாப்பிடும் போதோ அல்லது மிட்டாய் சாப்பிடும் போதோ முகம் மற்றும் கழுத்தில் வேர்க்கிறதா? இது ஃபிரே சிண்ட்ரோம் (Frey's syndrome) என்று அழைக்கப்படுகிறது. உமிழ்நீர் சுரப்பிகளில் ஏற்பட்ட பாதிப்பு அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிறகு நரம்புகள் தவறாக இணைக்கப்படுவதால் இது நிகழலாம். மேலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்பு பாதிப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
கல்லீரல்
வியர்வையில் துர்நாற்றம்
வியர்வைக்குத் தனிப்பட்ட மணம் கிடையாது. பாக்டீரியாக்கள் சேரும்போதுதான் மணம் வரும். ஆனால், வேர்வையில் வித்யாசமான வாசனை வருவது உள் உறுப்புகளின் பாதிப்பைக் குறிக்கும். வியர்வையில் அம்மோனியா போன்ற நெடி அடித்தால், அது சிறுநீரகம் அல்லது கல்லீரல் சரியாகச் செயல்படவில்லை என்பதைக் குறிக்கலாம். ஒருவேளை பழம் போன்ற இனிப்பு மணம் வீசினால், அது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருப்பதன் அறிகுறியாகும்.
தீர்வுகள்
வியர்வையைக் குறைப்பதற்கான தீர்வுகள்
அதிக காரம் மற்றும் கஃபைன் (Coffee/Tea) கலந்த பானங்களைத் தவிர்ப்பது வியர்வையைக் குறைக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடல் வெப்பத்தைச் சீராக வைத்திருக்க உதவும். கோடையில் காற்றோட்டமான பருத்தி உடைகளைத் தேர்வு செய்யுங்கள். உடல் எடையில் திடீர் குறைவு, காய்ச்சல், அல்லது வியர்வையுடன் கூடிய படபடப்பு இருந்தால் உடனடியாக ஒரு மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.