LOADING...
அதிர்ச்சித் தகவல்: இந்தியாவில் 20-30 வயது இளைஞர்களைத் தாக்கும் நீரிழிவு நோய்
இந்தியாவில் 20-30 வயது இளைஞர்களைத் தாக்கும் நீரிழிவு நோய்

அதிர்ச்சித் தகவல்: இந்தியாவில் 20-30 வயது இளைஞர்களைத் தாக்கும் நீரிழிவு நோய்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 16, 2025
04:01 pm

செய்தி முன்னோட்டம்

நீரிழிவு நோய் என்பது நடுத்தர வயதினரை மட்டுமே தாக்கும் என்ற பொதுவான நம்பிக்கை தற்போது நகர்ப்புற இந்தியாவில் மாறி வருகிறது. இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் மத்தியில் நீரிழிவு நோய் (Early-onset Diabetes) அதிவேகமாகப் பரவி வருவதாக புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ் நடத்திய இரண்டு ஆண்டு தேசிய அளவிலான ஆய்வின்படி, 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களில் 18% பேர் ஏற்கெனவே நீரிழிவு நோயாளிகளாக உள்ளனர். அதாவது, கிட்டத்தட்ட ஐந்து இளைஞர்களில் ஒருவருக்கு இந்த நோய் உள்ளது. மேலும், சுமார் கால் பகுதியினர் (25%) நீரிழிவு வருவதற்கு முந்தைய நிலையில் (Prediabetic) உள்ளனர். தென், மேற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் இதன் தாக்கம் 43% ஆக உள்ளது.

காரணம்

இளைஞர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான காரணிகள்

மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்தல், அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள், மற்றும் நாள்பட்ட மன அழுத்தம் (Chronic Stress) போன்ற நகர்ப்புற வாழ்க்கை முறைக் காரணிகள் தான் இந்த நோயை இளம் வயதிலேயே ஏற்படுத்துகின்றன. இளம் வயதில் (20களில்) நீரிழிவு நோய் வருவதால், அவர்கள் பல்லாண்டுகள் இந்த நோயுடன் வாழ நேரிடும். இதனால், அவர்களுக்குச் சிறுநீரக பாதிப்பு, ஆரம்பகால இருதய நோய், நரம்பு மற்றும் பார்வை கோளாறுகள் போன்றத் தீவிரமானப் பின்விளைவுகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்தியர்கள் குறைந்த உடல் எடையிலேயே நீரிழிவு நோயை உருவாக்கும் மரபணு ரீதியானக் காரணிகளைக் கொண்டுள்ளனர்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம்

டாக்டர்கள் இளைஞர்களுக்கு, வருடாந்திர HbA1c பரிசோதனைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து முழு தானியங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்வது, தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கத்தை உறுதி செய்தல் ஆகியவற்றை வலியுறுத்துகின்றனர்.