ஜப்பானில் சுற்றுலா செல்லவிருக்கிறீர்களா? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்!
ஜப்பான் நாடும், நாட்டு மக்களும், தங்கள் கலாச்சாரத்திற்கும், பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் தருபவர்கள். அதனால் அந்நாட்டிற்கு நீங்கள் சுற்றுலா செல்வதாக இருந்தால், நீங்கள் செய்ய கூடாதவை இதோ: வீடு, வேலை, உணவகங்கள் மற்றும் பள்ளிகளில் காலணிகள் அணியக்கூடாது: ஜப்பானியர்கள் உணவகங்கள், பள்ளிகள், வீடுகள் மற்றும் பணியிடங்களுக்குள் கூட ஷூ அணியக்கூடாது என்கிற கொள்கையை கடைபிடிக்கின்றனர். இது மரியாதைக்குரிய அடையாளமாகக் கருதப்படுகிறது. இது வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. பொது இடங்களில் சத்தமாக பேசவோ, இடையூறு விளைவிக்கவோ கூடாது: ஜப்பான் மக்கள், தனி மனித மரியாதைக்கும், கண்ணியத்துக்கும் முக்கியத்துவம் தருவார்கள். அதனால், பொதுவெளியில், மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ, அவமரியாதையான செயல்களையோ தவிர்க்கவும். சத்தமாக உரையாடுவதையும் தவிர்க்கவும்.
தனிப்பட்ட சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தரும் ஜப்பானிய கலாச்சாரம்
தனிப்பட்ட சுகாதாரத்தை புறக்கணித்தல்: சுத்தமான ஆடைகளை அணிவது, எப்பொழுதும் சுத்தமாகவும், அழகாகவும் இருத்தல், மிதமான வாசனை திரவியத்தை உபயோகிப்பது என, தனிப்பட்ட சுகாதாரத்தை கவனிக்கவும். கூடுதலாக, நீங்கள் அடிக்கடி உங்கள் கைகளை கழுவ வேண்டும், தும்மும் போதோ, இருமும் போதோ கைக்குட்டையை பயன்படுத்தவும். பொது இடத்தில் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது: ரயில்கள், பேருந்துகள் போன்ற பொது இடங்களில் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. அவை அநாகரீக செயலாக கருதப்படுகிறது. பொது இடங்களில் அசுத்தம் செய்வதும் கூடாது. தவறான சாப்ஸ்டிக்ஸ் பயன்பாடு: ஜப்பானிய உணவு வகைகளில் சாப்ஸ்டிக்ஸ் ஒரு முக்கிய அங்கமாகும். உண்ணும் போது, உங்கள் சாப்ஸ்டிக்ஸ் மூலம் சுட்டிக்காட்டுவது அநாகரீகமாக கருதப்படுகிறது. உங்கள் அரிசி கிண்ணத்தில், சாப்ஸ்டிக்குகளை செங்குத்தாக குத்தவும் கூடாது.