புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிக மது, அசைவம் வேண்டாமே! 'ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரோம்' குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
ஆண்டு இறுதி மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில், இளைஞர்களிடையே மாரடைப்பு மற்றும் இதயப் படபடப்பு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கு "ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரோம்" (Holiday Heart Syndrome) என்று பெயரிடப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் அல்லது பார்ட்டிகளில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது மற்றும் உப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவிற்கு அதிகமாக உண்பதால் இதய துடிப்பில் சீரற்ற நிலை (Atrial Fibrillation) ஏற்படுகிறது. இதுவே ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரோம் எனப்படுகிறது.
காரணங்கள்
'ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரோம்' வருவதற்கான முக்கிய காரணங்கள்
மது அருந்துவது இதய செல்களில் மின் சமிக்ஞைகளை பாதித்து, இதயத் துடிப்பை சீர்குலைக்கிறது. ஜங்க் உணவுகளில் இருக்கும் அதிகப்படியான உப்பு ரத்த அழுத்தத்தை உடனடியாக உயர்த்துகிறது. தற்போது நிலவும் கடும் குளிரால் ரத்த நாளங்கள் சுருங்குவதால், இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம். கொண்டாட்டங்களின் போது போதிய தூக்கம் இல்லாததும், பொருளாதார அல்லது தனிப்பட்ட காரணங்களால் ஏற்படும் மனஅழுத்தமும் இதயத்தை பாதிக்கிறது. 30 மற்றும் 40 வயதுகளில் உள்ள இளைஞர்கள் தற்போது இந்த பாதிப்பிற்கு அதிகம் உள்ளாவதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஏற்கனவே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அல்லது உடல் பருமன் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
வழிமுறைகள்
தற்காத்து கொள்ள வழிமுறைகள்
1. மது அருந்துவதைத் தவிர்ப்பது அல்லது மிகக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. 2. உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் இருக்க தினமும் 8 - 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். 3. அதிக உப்பு மற்றும் கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்கவும். 4. கொண்டாட்டங்களுக்கு நடுவிலும் தினமும் 5,000 முதல் 10,000 அடிகள் நடப்பதை உறுதி செய்யுங்கள். 5. பார்ட்டி முடிந்து மறுநாள் போதிய நேரம் (7-8 மணிநேரம்) உறங்குவது இதயத்திற்கு ஓய்வைத் தரும். நெஞ்சு வலி, மூச்சுத்திணறல் அல்லது வழக்கத்திற்கு மாறான இதய படபடப்பு இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.