இரவில் அதிக நேரம் மொபைல் போன் உபயோகப்படுத்துபவரா நீங்கள்?
இன்றைய வாழ்க்கை சூழலில் மொபைல் போன் என்பது நமது அனைவரது வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை மொபைல் போன் பயன்படுத்தாத நபர்கள் யாரும் இல்லை என்ற நிலை தான் தற்போது உலகம் முழுவதுமே உள்ளது என்று கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்கள் தான் இவர்களின் அன்றாட பொழுதுபோக்காக மாறிவிட்டது என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. இரவில் அதுவும் நள்ளிரவில் மொபைல் போன்களில் சிறிது நேரம் பொழுதை கழித்தால் தான் அன்றைய தினம் பூர்த்தியடைந்ததாக இக்கால இளைஞர்கள் மனநிலை மாறிவிட்டது.
மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்
இவ்வாறு இரவு நேரத்தில் மொபைல் போன்கள் பயன்படுத்துவதால் 'ரிவென்ஜ் பெட் டைம் புரோகிராஸ்டினேஷன்' என்னும் பிரச்சனை ஏற்படுவதாக மருத்துவத்துறை கூறுகிறது. அதாவது, மொபைல் போனை பார்ப்பதற்காக தூக்கத்தை தள்ளிப்போடுவது, படுத்தவாறு ஆன்லைனில் வெகுநேரம் இருப்பது, நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் சிறிது நேரத்தினை மொபைல் போனில் செலவிட நினைத்து போனை பயன்படுத்துவது, ஆன்லைன் தளங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பது போன்றவை இந்த பிரச்சனைக்கு மிகப்பெரிய காரணமாக அமைகிறது என்றும் கூறப்படுகிறது.
மன அழுத்தத்தை போக்குவதாக இளைஞர்கள் கூறும் காரணம்
இது போன்று பழக்கங்கள் கொண்டிருப்பதால் தங்கள் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதோடு, தூக்கம் கெட்டு உடல்நிலையும் பாதிக்கும் என்று தெரிகிறது. எனினும் தினசரி வாழ்வில், பணிகளில் ஏற்படும் மன அழுத்தத்தினை போக்கவே மொபைல் போன்களை உபயோகப்படுத்துவதாக இளைஞர்கள் பலர் கூறுகின்றனர் என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இரவு நேரம் சமூக வலைத்தளங்களில் நேரம் செலவழிப்பதன் மூலம் உடனடியாக புத்துணர்ச்சி அடைந்து மகிழ்ச்சியினை பெறுகிறார்கள் என்று சில நிபுணர்களும் கூறுகின்றனர்.
மன அழுத்தத்தை அதிகரிக்கும் மொபைல் போன்
ஆனால், இவ்வாறு இரவில் மொபைல் போன் பயன்படுத்துவது அவர்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தை தான் தருகிறது என்று மன நல மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் இது இளைஞர்கள் இடையில் மட்டுமின்றி 14 வயது முதல் 50 வயது வரம்பு கொண்டவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. தொடர்ந்து, இந்த பழக்கத்தால் உடல் பருமன், இதயம் சார்ந்த பிரச்சனைகள், மன அழுத்தம், பதட்டம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இப்பழக்கத்தை தவிர்க்க சில வழிமுறைகள்
இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க இரவில் மொபைல் போன்களை பயன்படுத்துவதனை தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக தூங்கும் வேறு ஏதேனும் விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு மனதை அமைதிப்படுத்தி கொள்ள வேண்டும். தினமும் இரவு ஒரே நேரத்தில் தூங்க செல்ல வேண்டும். அன்றாட வேலைகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளலாம், தேவைப்பட்டால் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவதும் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.