உங்கள் மகனிடம், இந்த வாக்கியங்களை உபயோகிப்பது, தவறான உதாரணமாக மாறும்
ஒரு நல்ல குடிமகன் உருவாவது, அவர்கள் பெற்றோர் வளர்ப்பதில் தான் உள்ளது எனக்கூறுவர்கள். உங்கள் பிள்ளை சமூகத்தில் 'ஜென்டில்மேன்'னாக உருவாக, உங்கள் ஆண் பிள்ளைகளிடம் நல்லொழுக்கங்களை கற்பிப்பதோடு மட்டுமல்லாமல், பாலியல் சமத்துவம் பற்றியும் கூறவேண்டும். அடுத்த தலைமுறை சமூகம், சமத்துவதுடன் செயல்படவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவும், உங்கள் ஆண் பிள்ளைகளிடம் நீங்கள் தவிர்க்க வேண்டிய ஆணாதிக்கம் நிறைந்த வாக்கியங்கள் சில: 'இவை பெண்களுக்கான வேலைகள்': பாலின நிலைப்பாடுகளைத் தவிர்த்து, ஒரு வேலையை பாலினத்தால் பகுக்க முடியாது, கூடாது என்பதை உங்கள் மகன்களுக்குக் கற்றுக் கொடுங்கள். பிங்க் நிறம் கேர்ள்ஸ்க்கு, நீலம் தான் பாய்ஸ்க்கு என பாகுபாடு காட்டாதீர்கள். பெண்களுக்கான பொம்மைகள், பெண்களுக்கான விளையாட்டு எனக்கூறி அவர்கள் ஆர்வத்திற்கு தடை போட வேண்டாம.
சமையல் என்பது பெண்களுக்கான வேலை கிடையாது
'பையன்கள் அழுவதில்லை': அழுகை என்பது ஒரு பொதுவான உணர்ச்சி வெளிப்பாடு. "பையன்கள் அழுவதில்லை", "நீ ஒரு பெண்ணைப் போல அழுகிறாய்" போன்ற விஷயங்களைச் சொல்லி, ஆணாதிக்க கருத்துக்களை திணிப்பதற்கு பதிலாக, அவர்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு ஊக்குவிக்கவும். ஒரு அறிக்கையின்படி, தங்கள் உணர்ச்சிகளை மறைக்கும் ஆண்களுக்கு மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்கள் அதிகமாக இருக்கும். 'ஆண்களுக்கு வெளி வேலை, பெண்களுக்கு வீட்டு வேலை': எந்த வேலையாக இருந்தாலும், இருவரும் பகிர்ந்து செய்யலாம். பெண்கள் மட்டுமே வீட்டு வேலையை பார்த்து கொள்ள வேண்டும் என்பது அவசியம் இல்லை. சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது அல்லது சிறு குழந்தைகளை கவனித்துக்கொள்வது போன்ற அடிப்படை வீட்டு வேலைகளை உங்கள் மகன்களுக்கு கற்றுத் தாருங்கள்.