விரைவாக, தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி ?
இந்தியாவில் தட்கல் ரயில் டிக்கெட் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், தட்கல் பாஸ்போர்ட்டைப் பற்றித் தெரியுமா? ஆம், விரைவாக அல்லது அவசரமாக பாஸ்போர்ட் தேவைப்படுவர்கள் சாதாரணமாக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்காமல், தட்கல் வழியாக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கலாம். சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கும், தட்கல் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கும் வித்தியாசம் எதுவுமே இல்லை. ஆனால், தட்கல் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு, சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்பத்தை விடக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த தட்கல் வழி பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களுக்கு, காவல்துறை சரிபார்ப்பு தேவைப்படாத பட்சத்தில், விண்ணபிக்கும் நாளைத் தவிர்த்து, மூன்று வேலை நாட்ளுக்குள் பாஸ்போர்ட் நம் கைகளில் கிடைத்துவிடும். காவல்துறை சரிபார்ப்பு தேவைப்படும் பட்சத்தில், அது பாஸ்போர்ட்டை நமக்கு மூன்று வேலை நாட்களில் வழங்கிய பிறகு நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்படி தட்கல் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பது?
வழக்கமாக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை தான் தட்கல் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கும். ஆனால், விண்ணப்பத்தின் போது தட்கல் என்பதனைத் தேர்வு செய்ய வேண்டும். மேலும், ஆன்லைன் மூலமே தட்கல் பாஸ்போர்ட்டிற்கும் விண்ணப்பிக்க முடியும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால், பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு வழங்கக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆவணங்களில் ஏதேனும் மூன்று ஆவணங்களுடன் தட்கல் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கலாம். சாதாரணமாக பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், தட்கல் முறையிலான பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு ரூ.3,500 முதல் ரூ.5,500 வரை கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.