கொரோனா காலத் திருமணங்கள் 6 மாதத்தில் முறிவு! சென்னை உயர் நீதிமன்றம் கவலை
செய்தி முன்னோட்டம்
2020 முதல் 2022 வரையிலான கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நடைபெற்ற திருமணங்களில் விவாகரத்து வழக்குகள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிவில் சீராய்வு மனு மீதான விசாரணையின் போது, நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் இக்கருத்தைப் பதிவிட்டார். கொரோனா ஊரடங்கு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்ததோடு மட்டுமல்லாமல், திருமண உறவுகளிலும் பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மண முறிவு
95 சதவீத வழக்குகள் 6 மாதங்களில் முறிவு
கடந்த மூன்று மாதங்களில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த குடும்பத் தகராறு வழக்குகளில் 95 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் கொரோனா காலத்தில் திருமணமான தம்பதிகளுடையது ஆகும்.
இதில் பெரும்பாலான தம்பதிகளின் திருமண வாழ்க்கை வெறும் 6 முதல் 9 மாதங்கள் மட்டுமே நீடித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே வீட்டில் அடைபட்டுக் கிடந்த சூழலும், எதிர்காலம் குறித்த பயமும் தம்பதிகளின் சுபாவத்தை வெளிப்படுத்தி அவர்களின் உறவைப் பாதித்துள்ளதாக நீதிமன்றம் கவலையுடன் தெரிவித்துள்ளது.
உத்தரவு
மாநில அளவிலான தரவுகளைச் சேகரிக்க உத்தரவு
இத்தகைய கொரோனா கால விவாகரத்து வழக்குகளை பொதுவான வழக்காகப் பார்க்காமல், சிறப்புப் பிரிவாகக் கருதி மாற்று வழிகளில் தீர்வு காண வேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார்.
இதற்காக தமிழ்நாட்டின் அனைத்து முதன்மை மாவட்ட நீதிபதிகளும், குடும்ப நல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 2020-2022 காலக்கட்ட விவாகரத்து வழக்கின் தரவுகளைச் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்தகவல்களை வரும் நவம்பர் 27 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமரசம்
சமரச முறையில் வழக்குகளைத் தீர்க்கத் திட்டம்
குடும்ப நல நீதிமன்ற வழக்கறிஞர்களின் உதவியுடன் இத்தகைய தம்பதிகளுக்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கி, வழக்குகளை சுமூகமாகத் தீர்க்க நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.
பாரம்பரிய வழக்கமான முறைகளைத் தாண்டி, மாற்று சிந்தனைகளுடன் அணுகினால் மட்டுமே இக்குடும்பத் தகராறுகளுக்குத் தீர்வு காண முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
பெருந்தொற்று ஏற்படுத்திய உளவியல் மற்றும் சமூகப் பாதிப்புகளே இந்த விவாகரத்து உயர்வுக்கு முதன்மை சான்றாக அமைந்துள்ளன என சென்னை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.