தொடர்ந்து 'ரீல்ஸ்' பார்ப்பதால் ஏற்படும் மனநல பாதிப்பு.. புதிய ஆய்வு முடிவுகள்!
செய்தி முன்னோட்டம்
டிக்டாக்கின் எழுச்சியைத் தொடர்ந்து இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் ஷார்ட் வீடியோக்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது.
டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் ஷார்ட் வீடியோ பார்மெட்டை கையிலெடுத்துக் கொண்டன.
இந்த ஷார்ட் வீடியோ பார்மெட்டானது ஜென் Z தலைமுறையை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது MS பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் துறை.
அந்த ஆய்வின்படி 8 முதல் 23 வயது வரையிலான ஜென் Z தலைமுறையினரில் ஆண்கள் மொபைலை பயன்படுத்தும் நேரத்தில் 60% ரீல்ஸ் பார்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும், பெண்கள் 40% நேரத்தை ரீல்ஸ் பார்க்க பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
டிக்டாக்
ஷார்ட் வீடியோக்களும், மாணவர்களின் மன நலனும்:
'ஷார்ட் வீடியோக்கள் மற்றும் மாணவர்களின் மனநலன்: ஓர் ஆய்வு' என தலைப்பிடப்பட்ட அந்த அறிக்கையில், சமூக வலைத்தள நிறுவனங்கள், பயனர்களை அதிக நேரம் ரீல்ஸ் பார்க்க தூண்டும் வகையிலேயே அதனை வடிவமைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
ஸ்க்ரோல் செய்ய செய்ய நிற்காமல் வந்து கொண்டே இருக்கும் ரீல்கள், பயனர்கள் எதுவமே செய்யவில்லை என்றாலும் லூப் மோடில் ஓடும் வீடியோக்கள் பயனர்களை கட்டிப்போடுகின்றன.
தொடர்ந்து இரண்டு மணி நேரத்தில் 360-ல் இரந்து 480 ரீல்கள் வரை மாணவர்கள் பார்க்கின்றனர். இந்த ஆய்வில் பங்கேற்ற 75% மாணவர்கள் குடும்பத்துடன் செலவிடும் நேரம் குறைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். 65% பேர் உடல் சார்ந்த வேலைகள் குறைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் தொடர்ந்து ரீல்ஸ் பார்க்கும் மாணவர்களின் மனநலனும் பாதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.