குளிர்ச்சியான காலநிலை மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்; நிபுணர்கள் பகீர் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், இதயநோய் நிபுணர்கள், ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்கள் மற்றும் பொது மக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். குளிர் காலநிலை இதயத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது என்றும், இதனால் மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகள் ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கூடுதல் விபரங்கள் இங்கே:-
ஆக்ஸிஜன்
ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கும் அபாயம்
குளிர்காலத்தில் நமது உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்களால், இதயத்தின் வேலைப்பளு கூடுகிறது. இரத்தக் குழாய்கள் சுருங்குவதால் (Vasoconstriction), இதயத்தைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, இதயத்தை அடைய வேண்டிய ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. இதனால், இதயத்தின் ஆக்ஸிஜன் தேவைக்கும், குறுகிய இரத்த நாளங்கள் வழங்கும் ஆக்ஸிஜன் விநியோகத்திற்கும் இடையில் ஒரு முரண்பாடு ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது என்று நிபுணர்கள் விளக்கினர்.
ஆபத்து
மாற்றக்கூடிய ஆபத்துக் காரணிகள்
மாரடைப்பு யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஆபத்தைக் குறைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, புகையிலைப் பழக்கம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை நாம் மாற்றக்கூடிய முக்கிய ஆபத்துக் காரணிகளாகும். குளிர்காலத்தில், இதய நோயாளிகள் வழக்கமான உடற்பயிற்சிகளைத் தொடர வேண்டும், ஆனால் கடும் குளிரைத் தவிர்க்கும் வகையில் நேரத்தை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல், வியர்வை வெளியேறாததால், உப்பு மற்றும் நீர் உட்கொள்ளலைக் குறைப்பது நல்லது. புகையிலை உட்கொள்வதை முற்றிலும் தவிர்ப்பது மற்றும் இளவயதினரிடையே அதிகரித்து வரும் மன அழுத்தத்தைக் குறைப்பது ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.