சாக்லேட் சாப்பிட்டால் அதிக காலம் இளமையாக வாழலாம்! ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்
செய்தி முன்னோட்டம்
சாக்லேட் சாப்பிடுவது உடல்நலத்திற்குத் தீங்கானது என்ற பொதுவானக் கருத்திற்கு மாறாக, கோகோ (Cocoa) விதைகளில் உள்ள ஒரு இயற்கையான வேதிப்பொருள் மனிதர்களின் உயிரியல் ரீதியான வயதான தன்மையை (Biological Ageing) மெதுவாக்க உதவும் என சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. சாக்லேட்டில் உள்ள கசப்புத் தன்மைக்குக் காரணமான 'தியோப்ரோமைன்' என்ற பொருள்தான் இந்த அதிசயத்தைச் செய்கிறது. அமெரிக்காவின் தேசிய ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு நிறுவனம் (NHANES) சுமார் 4,000க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில், ரத்தத்தில் அதிக அளவு தியோப்ரோமைன் கொண்டிருப்பவர்கள், அவர்களின் உண்மையான வயதை விடக் குறைந்த அளவிலான 'உயிரியல் வயது' (Biological age) கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
நன்மை
இது உடலுக்கு எப்படி உதவுகிறது?
அதாவது, ஒருவருக்கு 50 வயதாக இருந்தாலும், தியோப்ரோமைன் உடலில் அதிகமாக இருந்தால், அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் 40 வயதுடையவரின் உறுப்புகளைப் போல இளமையாக இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. இந்த தியோப்ரோமைன் மூன்று முக்கிய வழிகளில் முதுமையைத் தடுக்கிறது. உடலில் செல்கள் சேதமடைவதைத் தடுத்து, வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் நாள்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது நரம்பு மண்டலத்தைத் தூண்டி, ஞாபக சக்தியை அதிகரிக்கவும், முதுமையில் ஏற்படும் மறதி நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.
எச்சரிக்கை
எச்சரிக்கை: எந்த சாக்லேட் சிறந்தது?
சாக்லேட்டுகள் இதைப் படித்தவுடன் கடைகளில் கிடைக்கும் இனிப்பான பால் சாக்லேட்டுகளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட வேண்டாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். அதிக அளவு கோகோ (குறைந்தது 70% மேல்) உள்ள டார்க் சாக்லேட்டுகளில் தான் தியோப்ரோமைன் அதிகமாக உள்ளது. சாதாரண மில்க் சாக்லேட்டுகளில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் கொழுப்பு இருப்பதால், அவை உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும். எனவே, பலன் பெற டார்க் சாக்லேட்டை அளவோடு சாப்பிடுவதே சிறந்தது. இந்த ஆய்வு எதிர்காலத்தில் முதுமைத் தடுப்பு மருந்துகள் தயாரிக்க ஒரு முன்னோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.