LOADING...
நாய், பூனை கீறினாலும் ரேபிஸ் பரவுமா? அலெர்ட் மக்களே; மருத்துவர்கள் எச்சரிக்கை
செல்லப் பிராணிகளின் கீறலாலும் ரேபிஸ் பரவலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை

நாய், பூனை கீறினாலும் ரேபிஸ் பரவுமா? அலெர்ட் மக்களே; மருத்துவர்கள் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 25, 2025
02:47 pm

செய்தி முன்னோட்டம்

ரேபிஸ் நோயால் ஏற்படும் மரணங்கள் கவனம் ஈர்த்து வரும் நிலையில், நாய் கடிப்பதன் மூலம் மட்டுமின்றி, அதன் கீறல்களின் மூலம் ஏற்படும் அபாயத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் அகமதாபாத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் வன்ராஜ் மஞ்ஜாரியாஇதனால் இறந்துள்ளார். மிருகங்களை நேசித்தவரான மஞ்ஜாரியா, இந்த மாதம் ஒரு பண்ணை வீட்டிற்குச் சென்றபோது, அங்குள்ள குடும்ப நண்பரின் செல்லப் பிராணி நாய் கீறியதன் மூலம் இந்த உயிர்க்கொல்லி வைரஸால் பாதிக்கப்பட்டார். செப்டம்பர் 15 அன்று அவர் மிக மோசமாக நோய்வாய்ப்பட்டபோது, அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரேபிஸ் நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை என்பதால், அறிகுறிகள் தோன்றிய பிறகு அவர் குணமடையவில்லை.

கீறல்கள்

வன்ராஜ் மஞ்ஜாரியா காலில் மங்கலான கீறல்கள்

விசாரணையில், வன்ராஜ் மஞ்ஜாரியாவின் உறவினர்களுக்கு நாய் கடித்தது குறித்து எதுவும் தெரியவில்லை. ஆனால் மருத்துவமனையில் அவரது கால்களில் நாயின் இரண்டு மங்கலான கீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ரேபிஸ் நோயை உருவாக்கும் வைரஸ், தொற்றுள்ள விலங்கு ஒருவரை கீறுவதற்கு முன் அதன் பாதங்களை நக்கினால் கீறல்கள் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம், செல்லப் பிராணிகளின் ஆண்டு தடுப்பூசிகளைத் தவறாமல் இடுவது எவ்வளவு முக்கியம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தெரு நாய்களுடன் பழகும் தடுப்பூசி போடப்படாத செல்லப் பிராணிகளும் இந்த நோய்க்கான கடத்திகளாக மாற முடியும்.

மருத்துவர்கள்

மருத்துவர்கள் ஆலோசனை

மருத்துவர்கள், பூனை அல்லது நாயின் கீறலால் தோலில் சிறிய காயம் ஏற்பட்டிருந்தாலும் கூட, உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு வலியுறுத்துகின்றனர். ஒரு நிபுணரின் கூற்றுப்படி, கீறிய இடத்தில் ஸ்பிரிட் தடவும்போது எரிச்சல் ஏற்பட்டால், தோலில் காயம் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். அவ்வாறானால், ரேபிஸ் தடுப்பூசி (நான்கு டோஸ்கள்) மற்றும் இம்யூனோகுளோபுலின் (ஆயத்த ஆன்டிபாடிகள்) ஆகிய இரண்டையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ரேபிஸ் 100% மரணத்தை விளைவிக்கக்கூடியதால், கீறிய விலங்கு ஆரோக்கியமாகத் தோன்றினாலும் கூட, தடுப்பூசி போடும் கால அட்டவணையை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 5,700-க்கும் மேற்பட்ட ரேபிஸ் மரணங்கள் பதிவாகும் நிலையில், கீறல்களுக்குக்கூட உடனடியாக சிகிச்சை அளிப்பது உயிர் பிழைக்க அவசியமாகும்.