உணவை மாற்றி விநியோகம் செய்த பர்கர் கிங், ஸ்விக்கி நிறுவனங்களுக்கு ₹72,000 அபராதம் விதித்தது நுகர்வோர் நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
சைவ பர்கர்களுக்கு பதிலாக அசைவ பர்கர்களை விநியோகம் செய்த வழக்கில் பர்கர் கிங் இந்தியா மற்றும் ஸ்விக்கி நிறுவனங்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குருகிராம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் இரு நிறுவனங்களுக்கும் கூட்டாக ₹72,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தால் இரண்டு குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மன உளைச்சல் மற்றும் வழக்குச் செலவுகளுக்காக இத்தொகையை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகள்
2021-ல் ஆர்டர் செய்யப்பட்ட சைவ பர்கருக்குப் பதிலாக அசைவ பர்கர் சாப்பிட்ட குழந்தைகள்
குருகிராம் செக்டார் 46-ஐ சேர்ந்த பகவான் தாஸ் மங்லா என்பவர் கடந்த 2021 ஏப்ரல் 2 அன்று ஸ்விக்கி செயலியில் ஆர்டர் செய்தார்.
உடல்நலமில்லாத தனது மனைவிக்காக பர்கர் கிங்கிலிருந்து நான்கு சைவ பர்கர்களை அவர் வாங்கியிருந்தார்.
மனைவிக்குப் பசியில்லாததால் அவர் பார்சலை பிரிக்காமல் வைத்திருந்த நிலையில் குழந்தைகள் அதனை எடுத்துச் சாப்பிட்டனர்.
அப்போது வித்தியாசமான சுவையை உணர்ந்த குழந்தைகளுக்குக் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டது.
ஆன்மீக யாத்திரை
ஆன்மீக யாத்திரை சமரசத் திட்டத்தை நிராகரித்து நுகர்வோர் நீதிமன்றத்தை நாடிய மனுதாரர்
மாலை வீடு திரும்பிய மங்லா உணவுப் பொட்டலத்தை சோதனை செய்தபோது அவை அசைவ பர்கர்கள் என்பது தெரியவந்தது.
சைவக் குடும்பத்தின் மத உணர்வுகளை இந்த சம்பவம் புண்படுத்தியதாகக் கூறி ஸ்விக்கியிடம் அவர் புகாரளித்தார்.
தவறை ஒப்புக்கொண்ட பர்கர் கிங் பிரதிநிதி ஆன்மீக யாத்திரை மற்றும் ₹25,000 இழப்பீடு வழங்க முன்வந்தார்.
ஆனால் அந்த சமரசத் திட்டத்தை நிராகரித்த மங்லா நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆணையம் உத்தரவு
45 நாட்களுக்குள் ₹72,000 செலுத்தாவிட்டால் 12% ஆண்டு வட்டியுடன் வழங்க ஆணையம் உத்தரவு
ஆணையத் தலைவர் சஞ்சீவ் ஜிண்டால் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.
ஸ்விக்கி சாட் விவரங்கள் மற்றும் ரசீதுகள் நிறுவனங்களின் அலட்சியத்தை நிரூபிக்கப் போதுமானவை என ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து மன உளைச்சலுக்கு ₹50,000 மற்றும் வழக்குச் செலவுகளுக்கு ₹22,000 என மொத்தம் ₹72,000 வழங்க உத்தரவிடப்பட்டது.
45 நாட்களுக்குள் இத்தொகையை செலுத்தாவிட்டால் 12 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் ஆணையம் எச்சரித்துள்ளது.