மேக்டொனல்ட்ஸ் ஸ்டைல் பிரட் பீட்சா பாக்கெட் செய்வது எப்படி?
வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது பல பெற்றோருக்கும் இமயமலை போராட்டமாக இருக்கும். தற்போது இருக்கும் குழந்தைகளுக்கு வெளியில் ஆர்டர் செய்யும் உணவும், ஜங்க் ஃபுட்களும் தான் விருப்ப தேர்வாக உள்ளது. ஆனால் எப்போதும் பிள்ளைகளுக்கு அதையே வாங்கி தருவது பெற்றோர்களான நமக்கு தவறு என தெரியும். இருப்பினும் பிள்ளைகள் ஆசையை தவிர்க்க முடியாமல், எதையோ சாப்பிட்டா சரி என நினைக்கும் பெற்றோர்களும் உண்டு. அதே ஹோட்டல் ஸ்டைலில் சுவையான, அதே சமயம் ஆரோக்கியமான உணவை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்து விட்டால்? மேக்டொனல்ட்ஸ்-இன் பிரபலமான பீட்ஸா பாக்கெட்களை உங்கள் ஸ்டைலில், உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு செய்து தாருங்கள். அவர்கள் தினசரி இதேயே கேட்பார்கள்!
தேவையான பொருட்கள்
6 துண்டுகள் பிரட் துண்டுகள் 1 கேப்சிகம் (குடை மிளகாய், பொடியாக நறுக்கியது) 1 சிறிய கேரட்(பொடியாக நறுக்கியது) 1 தேக்கரண்டி எண்ணெய் 1/2 தேக்கரண்டி சில்லி ஃபிளேக்ஸ் 2 சீஸ் க்யூப்ஸ் தேவைக்கேற்ப உப்பு 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது 3 தேக்கரண்டி சோளம் 3 தேக்கரண்டி பீஸ்ஸா சாஸ் 1/2 தேக்கரண்டி ஒரீகனோ 4 பல் பூண்டு 4 தேக்கரண்டி எண்ணெய்
செய்முறை
ஒரு கடாயில், 1 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கவும். நறுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய கேரட், கேப்சிகம் மற்றும் சோளத்தை சேர்க்கவும். இந்த கலவையை 2-3 நிமிடங்கள் வதக்கவும். இப்போது சுவைக்கு தகுந்த உப்பு, ஒரீகனோ மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கவும். கடைசியாக, பீஸ்ஸா சாஸ் மற்றும் துருவிய சீஸ் சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கி, தீயை அணைக்கவும். உங்கள் ஃஸ்டப்பிங் கலவை தயார்.
செய்முறை
ஒரு பிரட் ஸ்லைஸை எடுத்து விளிம்புகளை நறுக்கிக்கொள்ளவும். ஒரு சப்பாத்தி கட்டை கொண்டு, பிரட் ஸ்லைஸ்-ஐ லேசாக தேய்க்கவும். இப்போது அந்த பிரட் ஸ்லைஸ் மீது 1-2 டீஸ்பூன் மசாலா கலவையை சேர்த்து, பரப்பி விடவும். ரொட்டியின் அனைத்துப் பக்கங்களிலும் சில துளிகள் தண்ணீரைத் தடவி, ரொட்டியை இரண்டாக மடியுங்கள். விளிம்புகளை மூடுவதற்கு எல்லா பக்கங்களிலும் லேசாக அழுத்தி விடவும். ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தில் 3 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கவும். சூடானதும், ரோல் செய்து வைத்துள்ள அனைத்து பாக்கெட்டுகளையும் வாணலியில் இட்டு, பொன்னிறம் வரும் வரை இருபுறமும் ஆழமாக வறுக்கவும்.