கொதிக்கவைத்தால் நீரில் உள்ள 80% மைக்ரோபிளாஸ்டிக்ஸை குறைக்கலாம்: ஆய்வில் தகவல்
ஆரோக்கியம்: குழாய் நீரில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்ஸின் அளவை குறைப்பதற்கான எளிய வழியை ஒரு புதிய ஆய்வு பரிந்துரைத்துள்ளது. வெறும் ஐந்து நிமிடங்களுக்கு நீரை கொதிக்கவைத்தால் மைக்ரோபிளாஸ்டிக்ஸின் அளவை 80% வரை குறைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒரு மில்லிமீட்டரை விட ஆயிரம் மடங்கு சிறியதாகவும், ஐந்து மில்லிமீட்டர் வரை பெரியதாகவும் வெவ்வேறு அளவுகளில் காணப்படும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் உடல்நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒரு நுண் பொருளாகும். இந்நிலையில், சீனாவின் ஜினான் பல்கலைக்கழகத்தின் டாக்டர் எடி ஜெங் தலைமையிலான ஒரு குழு குழாய் நீரில் இருக்கும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது.
ஒரு லிட்டர் நீரில் சராசரியாக 1 மில்லிகிராம் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உள்ளது
இந்த ஆய்வின் மூலம், ஆராய்ச்சியாளர்கள் குழாய் நீரின் மாதிரிகளில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்கின் அளவை அளவிட்டனர். ஒரு லிட்டர் நீரில் சராசரியாக 1 மில்லிகிராம் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதன் பின்னர், அவர்கள் அந்த நீரை ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைத்த பின்னர் அதை மறுஅளவீடு செய்தனர். அந்த ஆய்வின் முடிவுகளின் படி, வெறும் ஐந்து நிமிடங்களுக்கு நீரை கொதிக்கவைத்தால் அதில் இருக்கும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் 80% வரை குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மைக்ரோபிளாஸ்டிக்ஸால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் குறித்து ஏற்கனவே பல ஆய்வுகள் நடந்து வரும் நிலையில், குடிக்கும் நீரில் இருக்கும் மைக்ரோபிளாஸ்டிக்ஸை எளிதாக குறைக்கும் வழியை இந்த ஆய்வு வழங்குகிறது.