அதிகாலை சீக்கிரம் எழுவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
ஒவ்வொருவரும் தங்களின் அன்றாட அனுபவத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டுமென்றால், அதிகாலையில் சீக்கிரம் எழுவது நல்ல தீர்வாக இருக்கும். இருப்பினும், இதை செய்வதை விட சொல்வது எளிதானது என்பது எங்களுக்கு தெரியும். அதிகாலை சூரியன் எழும்போது நாமும் எழுவதால், பல குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளைப் பெறுகிறார்கள் என்பதை ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. சீக்கிரம் எழுவது உங்களுக்கு எவ்வாரெல்லாம் பயனளிக்கும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
சத்தான காலை உணவை சுவைக்கலாம்
காலை உணவைத் தவிர்ப்பதற்கான பொதுவான காரணம், காலையில் தாமதமாக எழுந்து வேலைக்கு ஓடுவதுதான். அதிகாலையில் எழுந்தால், ஆபீஸ் பயணத்தின்போது வெறும் சிற்றுண்டி அல்லது காபி/டீ மட்டும் எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, ஆரோக்கியமான காலை உணவைச் செய்து சாப்பிடுவதற்கு போதுமான நேரம் கிடைக்கும். கூடுதலாக, ஆரோக்கியமான காலை உணவு, நீண்ட நேரம் உங்களை நிறைவாக உணரவும், நாள் முழுவதும் அதிக ஆற்றலை அளிக்கவும் உதவும்.
உங்களுக்காக அதிக நேரம்
சீக்கிரம் எழுந்திருப்பது உங்களுக்கு மிகவும் தேவையான தனி நேரத்தை (my time) வழங்கலாம். குறிப்பாக நீங்கள் பெரியவர்கள் அல்லது குழந்தைகளுடன் வாழ்ந்தால். தவிர, சீக்கிரம் எழுந்தால், அன்றைய தினத்திற்குத் தயாராகும் அளவுக்கு நேரம் கிடைக்கும். அதிக நேரம் நிதானமாக காபி பருகுவது, செய்தித்தாள் படிப்பது அல்லது தியானம் செய்வது போன்றவற்றால், நீங்கள் இன்னும் கொஞ்சம் நிம்மதியாகவும், பிஸியான நாளை எதிர்கொள்ளத் தயாராகவும் இருக்கலாம்.
உடற்பயிற்சி செய்ய அதிக நேரம்
அதிகாலையில் எழுபவர்கள் தங்கள் வழக்கமான காலை உடற்பயிற்சியை இணைத்துக்கொள்வதன் மூலம், கூடுதல் பலனை அனுபவிக்கிறார்கள். இரவில் ஒர்க் அவுட் செய்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது தான். இருப்பினும் அந்த நேரத்தில் மற்ற வேலைகளை செய்வதற்கு உங்களுக்கு நேரம் இருக்கும். நீங்கள் காலையில் நேரத்தை ஒதுக்கினால், வழக்கமான உடற்பயிற்சி அட்டவணையை பராமரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சிறந்த மன ஆரோக்கியம்
சீக்கிரம் எழுவது உங்கள் நாளை மகிழ்ச்சியான மனப்பான்மையோடும், அவசரமோ, கிளர்ச்சியோ இல்லாமல் தொடங்க உங்களை அனுமதிக்கிறது. நிதானமான மற்றும் அமைதியான அதிகாலை நேரங்களில் ஜர்னலிங் அல்லது தியானம் போன்ற நினைவாற்றல் பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம், உங்கள் மன ஆரோக்கியத்தையும் நீங்கள் கவனித்துக் கொள்ளலாம் . மேலும், சிறந்த உணவுப் பழக்கங்கள் மற்றும் உடல் நலம் ஆகியவை மேம்பட்ட மன நலத்திற்கு பங்களிக்கின்றன மற்றும் மன அழுத்த அளவைக் குறைக்கின்றன.