யோகா செய்வதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன
நாளை(ஜூன் 21) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், யோகா செய்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து இப்போது பார்க்காலம். பண்டைய இந்திய பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற பரிசான யோகா, உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்கான மிகவும் நம்பகமான வழிமுறைகளில் ஒன்றாகும். அப்படிப்பட்ட யோகாவை தினமும் செய்தால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா? யோகாவின் மெதுவான அசைவுகள் மற்றும் ஆழ்ந்த சுவாசம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஒரு யோகாசனத்தை சில நொடிகள் அப்படியே பிடித்து வைத்திருப்பதால் தசைகள் வலுவடைகின்றன. மேலும், இதனால் இருதய ஆரோக்கியமும் மேம்படுகிறது. யோகா, ரத்த ஓட்டத்தை சீராக்குவது மட்டுமல்லாமல், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
மன ரீதியான பிரச்சனைகளையும் தீர்க்கும் யோகா
யோகாவை தினமும் செய்தால் உடலின் வழைந்துகொடுக்கும் தன்மை அதிகரிக்கும். முட்டி வலி, முதுகு வலியை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், எலும்புகளின் அடர்த்தியையும் யோகா அதிகரிக்கிறது. எலும்பு பிரச்சனைகளால் பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் உடல் பாதிப்புகளில் இருந்து உடலை பாதுகாத்துக்கொள்ள யோகா உதவும். இது போன்ற உடல் ரீதியான பிரச்சனைகளை மட்டுமல்லாமல் மன ரீதியான பிரச்சனைகளையும் யோகா தீர்க்கிறது. மருத்துவ நிபுணர்கள் நடத்திய பல்வேறு ஆய்வுகளின் மூலம், யோகா செய்வதனால் மன அமைதி கிடைக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவுவதுடன் மனதையும் இளமையாக வைத்திருக்க யோகா உதவுகிறது.