இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி
இந்தியாவில் வெப்ப அலைகள் அதிகரிப்பதால் நம் அன்றாட வாழ்வில் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள நேரலாம் என்று உலகவங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே காலநிலை மாற்றம் குறித்தும் உலக வெப்பமயமாதல் குறித்தும் பல சமூக ஆர்வல அமைப்புகள் எச்சரித்து வந்த நிலையில் இது ஒரு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் கடும் வெப்பத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மனிதர்கள் உயிர் வாழ முடியாத அளவு வெப்பம் விரைவிலேயே அதிகரிக்கலாம் என்று உலகவங்கி எச்சரித்துள்ளது. "இந்தியாவின் குளிரூட்டும் துறையில் காலநிலை முதலீட்டு வாய்ப்புகள்" என்னும் தலைப்பில் கேரள அரசும் உலக வங்கியும், ஆய்வு மேற்கொண்டது.
எச்சரிக்கும் உலகவங்கியின் அறிக்கை
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெப்பம் மிக அதிகமாக இருந்தது. நம் தலைநகர் டெல்லியில் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவு வரலாற்றிலேயே முதன்முறையாக 46 டிகிரி செல்சியஸாக உயர்ந்திருந்தது என்கிறது இந்த ஆய்வின் அறிக்கை. கார்பன் உமிழ்வு இதே அளவு இருந்தால், 2036-65 ஆண்டிற்குள் இந்தியாவின் வெப்பநிலை 25 சதவீதம் அதிகரிக்குமாம். இதனால் பொருளாதார உற்பத்தி பாதிக்க்கப்படும் என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீதம்($15-25 ஆயிரம் கோடிகள்) பாதிக்கப்படும் என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெப்பத்தில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நல்ல மின்சார குளிரூட்டிகள் தேவைப்படும். இதற்கு வசதி இல்லாத ஏழைபாழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்படும். இதனால், நிறைய உரிழப்புகளும் ஏற்படலாம் என்றும் இந்த அறிக்கை எச்சரிக்கிறது.