கொரோனாவை விட மோசமான சுகாதார நெருக்கடியில் இந்தியா? மருத்துவ நிபுணர்கள் கவலை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, கொரோனா காலத்திற்குப் பிறகு நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பொதுச் சுகாதார நெருக்கடி என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக வட இந்தியாவில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இது ஒரு மிகப்பெரிய 'சுனாமி' போன்ற சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் என்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நுரையீரல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அபாயம்
மறைந்திருக்கும் அபாயமும் இதய நோய் பாதிப்புகளும்
காற்று மாசுபாடு என்பது வெறும் நுரையீரல் தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல, இது இதய நோய்களுக்கும் (Cardiovascular diseases) முக்கிய காரணமாக அமைகிறது. கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்து வரும் இதய நோய்களுக்கு உடல் பருமனை விட, வாகனங்கள் மற்றும் விமானங்களில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையே முக்கிய காரணம் என்று லண்டன் புனித ஜார்ஜ் பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர் ராஜே நரேன் தெரிவித்துள்ளார். தலைவலி, சோர்வு, லேசான இருமல் மற்றும் கண் வறட்சி போன்ற அறிகுறிகளை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், அவை கடுமையான நோய்களின் ஆரம்ப எச்சரிக்கையாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கள நிலவரம்
அரசின் நிலைப்பாடும் கள நிலவரமும்
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில், காற்று மாசுபாடு சுவாச நோய்களுக்கு ஒரு தூண்டுதலாக இருந்தாலும், அதற்கும் மரணங்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான உறுதியான தரவுகள் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. இருப்பினும், டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கடுமையான சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, டெல்லியின் மாசுபாட்டில் 40 சதவீதம் போக்குவரத்துத் துறையால் ஏற்படுகிறது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். லான்செட் (The Lancet) அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 17 லட்சத்திற்கும் அதிகமான மரணங்கள் PM2.5 மாசுபாட்டால் ஏற்பட்டுள்ளன. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த ஒரு 'நுரையீரல் சுகாதார பணிக்குழு' (Lung Health Task Group) அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.