ஏன் மெட்டபாலிசம் சீராக இயங்க வேண்டும்?
அதிகம் சாப்பிட்டாலும் மெலிந்த தோற்றத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் உதவுவது மெட்டபாலிசம் ஆகும். சாப்பாட்டு பழக்கத்தையும் உடற்பயிற்சியையும் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு கூட மெட்டபாலிசம் சீராக இல்லை என்றால், அவர்களால் உடல் எடையை குறைக்க முடியாது. ஆனால், உடல் எடையை குறைப்பது மட்டும் தான் மெட்டபாலிசத்தின் வேலையா என்றால் இல்லை. உண்மையில், மெட்டபாலிசம் என்பது நல்ல ஆரோக்கியத்தின் வலுவான குறிகாட்டியாகும். மேலும் இது ஒருவரை நோய்களிலிருந்து விலக்கி வைக்கிறது. .
மெட்டபாலிசம் சீராக இயங்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகள்
மெட்டபாலிசம் என்பது உடல் உணவையும் பானத்தையும் ஆற்றலாக மாற்றும் செயல்முறையாகும். உணவுப் பொருட்களில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுத்து, உடலின் ஒவ்வொரு உயிரணுக்களும் பயன்படுத்துவதற்கு ஏற்ற ஏடிபியாக(அடினோசின் ட்ரைபாஸ்பேட் - ஆற்றல் மூலமாக) மாற்றுவதே மெட்டபாலிசத்தின் இறுதி நோக்கமாகும். சுவாசிக்கவும், உடல் வழியாக இரத்தத்தை அனுப்பவும், ஹார்மோன் அளவை சீராக வைத்திருக்கவும், செல்களை வளர்த்து சரி செய்யவும் உடலுக்கு ஓய்வு நேரத்தில் கூட ஆற்றல் தேவைப்படுகிறது. மெட்டபாலிசம் சீராக இயங்கவில்லை என்றால், இன்சுலின், கொலஸ்ட்ரால் அல்லது ட்ரைகிளிசரைடு அளவு அதிகரிப்பது அல்லது இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேர்வது போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.