நிமிஷத்துல ரிலாக்ஸ் ஆகணுமா? இந்த 5 மூச்சுப் பயிற்சிகளை மட்டும் செய்யுங்க; தூக்கமின்மைக்கும் சூப்பர் தீர்வு
செய்தி முன்னோட்டம்
மூச்சுப் பயிற்சிகள் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் சுலபமான, ஆனால் பயனுள்ள வழி. மன அழுத்தத்தைக் குறைக்கவும், கவனத்தை அதிகப்படுத்தவும், அமைதியா இருக்கவும் இது உதவுகிறது. இந்தப் பயிற்சிகளை தினசரி வாழ்க்கையில் சேர்த்துக் கொண்டால், உங்களுடைய மனதும் உடலும் நல்ல மாற்றத்தை உணரும். எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சுலபமாக செய்யக்கூடிய ஐந்து மூச்சுப் பயிற்சிகள் இங்கே:-
குறிப்பு 1
ஆழ்ந்த வயிற்று மூச்சுப்பயிற்சி
ஆழ்ந்த வயிற்று மூச்சுப்பயிற்சி என்றால், மூக்கு வழியாக ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, வயிறு நன்றாக உப்புவதுதான். இந்த முறை, நம் உடலுக்கு நிறைய ஆக்சிஜனை கொடுத்து, நம் உடலோடு இயல்பான அமைதி நிலையைத் தூண்டி, ஓய்வை அதிகப்படுத்துகிறது. இதை செய்வதற்கு, வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள் அல்லது படுத்துக் கொள்ளுங்கள். ஒரு கையை மார்பிலும், இன்னொரு கையை வயிற்றிலும் வைக்கவும். மூக்கு வழியாக நான்கு எண்ணும் வரை ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, நான்கு எண்ணும் வரை அதை நிறுத்தி, அப்புறம் வாய் வழியாக மெதுவாக ஆறு எண்ணும் வரை மூச்சை வெளியிடுங்கள்.
குறிப்பு 2
பாக்ஸ் மூச்சுப்பயிற்சி முறை
பாக்ஸ் மூச்சுப்பயிற்சி என்பது, நான்கு சமமான பகுதிகளைக் கொண்ட ஒரு முறையான பயிற்சி. இது மூச்சை உள்ளிழுப்பது, நிறுத்துவது, வெளியிடுவது, திரும்பவும் நிறுத்துவதாகும். இந்த முறை கவனத்தை அதிகப்படுத்தவும், பதட்டத்தைக் குறைக்கவும் உதவுகிறது. முதலில், மூக்கு வழியாக நான்கு வினாடிகள் மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும். பின்னர் நான்கு வினாடிகள் மூச்சை நிறுத்துங்கள். அப்புறம் வாய் வழியாக நான்கு வினாடிகள் மெதுவாக மூச்சை வெளியிடுங்கள். திரும்பவும் நான்கு வினாடிகள் நிறுத்துங்கள். அப்புறம் இந்த சுழற்சியை மறுபடியும் செய்யவும்.
குறிப்பு 3
மாற்று நாசி மூச்சுப்பயிற்சி
மாற்று நாசி மூச்சுப்பயிற்சி நமது மூளையின் இரண்டு பக்கங்களையும் சமநிலைப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துகிறது. இதைச் செய்ய, முதலில் நிமிர்ந்து, வசதியாக உட்கார்ந்து கொள்ளவும். உங்களுடைய வலது கை பெருவிரலால் வலது நாசியை மூடிவிட்டு, இடது நாசி வழியாக ஆழமாக மூச்சை உள்ளிழுக்கவும். சிறிது நேரம் இரண்டு நாசிகளையும் மூடிவிட்டு, அப்புறம் வலது நாசியை மட்டும் திறந்து, அது வழியாக மெதுவாக மூச்சை வெளியிடுங்கள். இதே மாதிரி, பக்கங்களை மாற்றி பல முறை செய்யவும்.
குறிப்பு 4
4-7-8 மூச்சுப்பயிற்சி முறை
நான்கு-ஏழு-எட்டு முறை என்பது, மூச்சு விடும் முறையைக் கட்டுப்படுத்தி, ஓய்வை அதிகப்படுத்த வடிவமைக்கப்பட்டது. மூக்கு வழியாக நான்கு வினாடிகள் அமைதியாக மூச்சை உள்ளிழுங்கள். ஏழு வினாடிகள் மூச்சை நிறுத்துங்கள். அப்புறம் வாய் உதடுகளை குவித்து, எட்டு வினாடிகள் முழுதாக மூச்சை வெளியிடுங்கள். தூங்கப் போவதற்கு முன்பு இந்த பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் இது உங்களை தூக்கத்துக்கு தயார்படுத்துகிறது.
குறிப்பு 5
நினைவாற்றல் மூச்சுப்பயிற்சி
நினைவாற்றல் மூச்சுப்பயிற்சி என்றால், நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களில் இருந்து அல்லது சிந்தனைகளில் இருந்து கவனத்தை சிதற விடாமல், ஒவ்வொரு நொடியையும் உணர்ந்து, அந்த நேரத்தில் மட்டும் வாழ்வது. முடிந்தால் கண்களை மூடிக்கொண்டு வசதியாக உட்கார்ந்து கொள்ளவும். மூச்சு உள்ளிழுப்பது, வெளியிடுவது என ஒவ்வொரு சுழற்சியில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். அதை மாற்ற முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் தொடர்ந்து இந்த பயிற்சியை செய்யும்போது, உங்களுடைய உடலுக்குள் இயற்கையாக என்ன நடக்கிறது என கவனியுங்கள்.