தினமும் ஏன் தயிரை உட்கொள்ள வேண்டும்?
ஆரோக்கியம்: தயிரில் அதிக ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. தயிரை தினசரி உட்கொள்ளவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். லாக்டோபாகிலஸ் எஸ்பி., லாக்டோகாக்கஸ் எஸ்பி., மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் எஸ்பி போன்ற பாக்டீரியாக்களால் தான் பால் தயிராக மாறுகிறது. பாலில் உள்ள லாக்டோஸை லாக்டிக் அமிலமாக மாற்றும் இந்த பாக்டீரியாக்கள், தயிருக்கு ஒரு புளிப்புச் சுவையை அளிக்கின்றன. எனவே, தயிரை தினமும் உட்கொள்வதால் செரிமானம் மேம்படுகிறது. ஒரு புரோபயாடிக் உணவான தயிரில் உயிருள்ள நுண்ணுயிரிகள் இருப்பதால், இது வயிற்றின் அமில அளவுகளில் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இதனால், அஜீரண கோளாறுகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
எலும்பு வலிமையை அதிகரிக்க தயிர் உதவுகிறது
குடலில் உள்ள மைக்ரோபயோட்டா கலவையை மாற்றியமைக்கும் திறன் தயிருக்கு இருக்கிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். எனவே, தினமும் தயிரை உண்பதால், குடல் அழற்சி, எடை அதிகரிப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்பின் அபாயங்கள் குறைகின்றன. தயிர், உடலில் உள்ள ப்யூட்ரேட் எனப்படும் கொழுப்பு அமிலங்களை அதிகரித்து, பிலோபிலா வாட்வொர்தியா என்ற கெட்ட பாக்டீரியாவை குறைக்கிறது. இதனால், எரிச்சல் கொண்ட குடல் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் வெகுவாக குறைகின்றன. எலும்பு ஆரோக்கியத்திலும் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், எலும்பு வலிமையை அதிகரிக்க தயிர் உதவுகிறது. தொடர்ந்து தயிரை உட்கொள்வதால், எலும்பு முறிவுகள், மூட்டுவலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்களின் அபாயம் குறையும்.