ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்த ஸோமாட்டோ ஊழியர்- வைரல் வீடியோ
புதிய வாகன சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், எரிபொருள் மையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதற்கு மத்தியில், ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்யும் ஸோமாட்டோ ஊழியரின் காணொளி வைரலாகி வருகிறது. ஸோமாட்டோ பையை தோளில் அணிந்தபடி, இம்பீரியல் ஹோட்டலுக்குப் பக்கத்தில் அமைந்துள்ள சஞ்சல்குடாவுக்கு குதிரையில், உணவு விநியோகம் செய்பவர் வருவதைக் அந்த காணொளியில் பார்க்க முடிந்தது. ஏன் குதிரையில் வருகிறீர்கள் என்று வழிப்போக்கர்கள் அவரிடம் கேட்டபோது, "பெட்ரோல் இல்லை. மூன்று மணி நேரம் வரிசையில் காத்திருந்தேன். நான் ஆர்டரை எடுத்துவிட்டு வெளியேறினேன். ஆனால் பெட்ரோல் கிடைக்கவில்லை" என தெரிவித்தார். எரிபொருள் நிரப்புவதற்காக பலர் ஒரே சமயங்களில் எரிபொருள் மையங்களில் கூடியதால், மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
குதிரையில் பயணிக்கும் ஸோமாட்டோ ஊழியர்
போராட்டத்தை திரும்பப் பெற்ற லாரி ஓட்டுநர்கள்
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றால் லாரி ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ₹7 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் திருத்தப்பட்ட குற்றவியல் சட்டத்தை எதிர்த்து, லாரி ஊழியர்கள் ஜனவரி 1ம் தேதி மூன்று நாள் போராட்டத்தை அறிவித்தனர். இதன் விளைவாக, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் எரிபொருள் மையங்களில் கூட தொடங்கினர். இதனால், பெரும்பான்மையான வட மாநிலங்களில் எரிபொருள் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று, மத்திய அரசு உடன் நடந்த பேச்சுவார்த்தையில், சட்டத்தை நிறுத்தி வைக்க அரசு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.