பெங்களூரில் கண்டறியப்பட்ட ஜிகா வைரஸ்- ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காய்ச்சல் மாதிரிகள்
பெங்களூரில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், காய்ச்சல் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த சுகாதாரத் துறையினர் முடிவு செய்துள்ளனர். சிக்கபல்லாபூர் பகுதியில் கொசுக்களை பிடித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் பரிசோதனைக்கு அனுப்பியதில், அதில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, டால்கேபெட்டா பகுதியின், 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "மாநிலம் முழுவதும் 100 மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில் ஆறு மாதிரிகள் சிக்கபல்லாபூர் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது". "இதில் 5 மாதிரிகள் நெகட்டிவ் ஆகவும், ஒரு மாதிரி பாசிட்டிவ் ஆகவும் வந்துள்ளது" என மாவட்ட மருத்துவ அதிகாரி மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 நபர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜிகா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?
டெங்கு, மலேரியாவை போல் ஜிகா வைரஸும், வைரஸ் பாதிக்கப்பட்ட ஏடிஸ் கொசு கடிப்பதன் மூலம் மக்களுக்கு பரவுகிறது. கடந்த 1947 ஆம் ஆண்டு, உகாண்டாவில் இந்த வகை வைரஸ் முதல் முதலில் கண்டறியப்பட்டது. கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில், கடந்த டிசம்பர் மாதம் 5 வயது சிறுமி ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, மாநில அரசு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் அதே டிசம்பர் மாதத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த முதியவர் ஒருவர், இந்த வகையை வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தார்.