
சென்னையில் மது அருந்திய கணவருக்காக போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண்
செய்தி முன்னோட்டம்
சென்னை சூளைமேடு பகுதியினை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் தனது நண்பர் வினோத்துடன் நேற்று(ஏப்ரல்.,17) இரவு மது அருந்திவிட்டு வந்துள்ளார்.
அப்போது அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறை இவர்களை நிறுத்தி விசாரித்துள்ளார்கள். அப்போது இவர்கள் மது அருந்தியது தெரியவந்துள்ளது.
இதனை உறுதி செய்ய ப்ரீத் அனலைசர் கொண்டு வந்து காவல்துறையினர் இவர்களை ஊதுமாறு கூறியுள்ளார்கள்.
அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து பேசியுள்ளனர்.
கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சத்யராஜ் தனது மனைவி அக்க்ஷயாவிற்கு போன் செய்து அவரை அங்கு வரவழைத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இளம்பெண்
வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
இதனை தொடர்ந்து சம்பவயிடத்திற்கு வந்த இளம்பெண் அக்க்ஷயா காவல்துறை சப்-இன்ஸ்பெக்டரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் குடித்துவிட்டு வாகனத்தினை ஓட்டிக்கொண்டு வந்தால் தான் பைன் போடவேண்டும். வண்டியினை தள்ளிக்கொண்டு வந்ததற்கு எல்லாம் பைன் போடக்கூடாது என்றும் ஆவேசமாக பேசியுள்ளார்.
எம்.பி.,யை அழைக்கவா, எம்.எல்.ஏ.வை அழைக்கவா என கேள்விக்கேட்ட அப்பெண் காவல்துறையினர் அனைவருமே பிராடு தான் என்றும் கூறியுள்ளார்.
இடையில் அவர் காவல்துறையினர் ஒருவரையும் தாக்கியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட போலீஸ்காரர் அளித்த புகாரின் பேரில், சத்யராஜ், வினோத் மற்றும் அக்க்ஷயா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தற்போது அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.