கேரளாவில் மீண்டும் நர பலியா? - காவல் துறை
கேரளாவில் கணவரோடு சேர்த்து வைக்கிறோம் என்று கூறி பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கேரளா திருவல்லாவில் சில மாதங்களுக்கு முன் 2 பெண்களை நரபலி கொடுத்த குற்றத்திற்காக மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது அதே ஊரில் ஒரு பெண்ணை நரபலி கொடுக்க முயற்சி செய்த மந்திரவாதியை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். கர்நாடகாவை சேர்ந்த ஒரு திருமணமான பெண் கொச்சியில் வாழ்ந்து வந்துள்ளார். கணவருடன் தகராறில் இருந்ததால் அதை எப்படி சரி செய்வது என்று தன் நண்பர்களிடம் அவர் ஆலோசனை கேட்டிருக்கிறார். இதற்கு ஒரு நண்பர் திருவல்லாவில் இருக்கும் ஒரு மந்திரவாதியிடம் சென்றால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறிஇருக்கிறார்.
மந்திரவாதியின் 'மாஸ்டர் பிளான்'!
இதைக் கேட்ட அந்த பெண்ணும் சரி முயற்சித்து பார்க்கலாம் என்று கடந்த 8ஆம் தேதி திருவல்லாவில் உள்ள குட்டப்புழா என்ற ஊருக்கு அந்த மந்திரவாதியை சந்திக்க சென்றார். அங்கு சென்றவரிடம் நன்றாகப் பேசி பரிகாரம் எல்லாம் செய்த அந்த மந்திரவாதி, அவரை நரபலி கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார். இதைப் பற்றி மந்திரவாதியும் அவரது நண்பரும் ஒதுக்கமாக சென்று விவாதித்து கொண்டனராம். அதை எப்படியோ ஒட்டுக்கேட்ட அந்த பெண், துண்டை காணும் துணியை காணும் என்று அந்த இடத்தில் இருந்து தப்பி தலைமறைவாகிவிட்டார். சில நாட்களுக்கு பின், அவர் தன் நண்பர்களின் உதவியோடு இதை போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீஸார் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.