
கடைகளில் பில் போடுவதற்கு செல்போன் நம்பர் கொடுக்க தேவையில்லை: மத்திய அரசு உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் நடக்கும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் செல்போன் நம்பர் கேட்க கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
செல்போன் நம்பர் கொடுக்கவில்லை என்றால் விற்பனையாளர்கள் சேவைகளை வழங்க மறுப்பதாகப் பல வாடிக்கையாளர்கள் புகார் செய்ததை அடுத்து இந்த அறிவுரையை நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
"விற்பனையாளர்கள் தனிப்பட்ட தொடர்பு விவரங்களை வழங்கும் வரை பில் போட முடியாது என்று கூறுகிறார்கள். இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நியாயமற்ற மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறையாகும்." என்று நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்தார்.
details
தனியுரிமை பிரச்னைகளும் இதனால் ஏற்படுகிறது: சிங்
இதனால், தனியுரிமை பிரச்னைகள் ஏற்படுவதாக கூறிய சிங், நுகர்வோர் நலன் கருதி சில்லறை வணிகம், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு(FICCI) மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஆகியவற்றுக்கு ஒரு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்தியாவில் பொருட்களை டெலிவரி செய்ய அல்லது பில் ஒன்றை உருவாக்க செல்போன் எண்களை சில்லறை விற்பனையாளர்களுக்கு தர தேவையில்லை என்று சிங் மேலும் கூறினார்.
ஆனால், பொருட்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் காட்டாயம் செல்போன் எண்ணை வழங்க வேண்டும் என்று விற்பனையாளர்கள் கூறுவதால், வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் மோசமான சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வேறு வழியும் இருப்பதில்லை என்று ரோஹித் குமார் சிங் கூறியுள்ளார்.