பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல... பாவ யாத்திரை - மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக இளைஞர் அணி மாநில-மாவட்ட மற்றும் மாநகர அமைப்பாளர்கள், துணை-அமைப்பாளர்கள் உள்ளிட்டோரின் அறிமுகக்கூட்டமானது இன்று(ஜூலை.,29)சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய நிர்வாகிகளை வாழ்த்திப்பேசினார். அதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கும் பதவி அவரது உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்று கூறினார். அதனையடுத்து, "எனக்கு வயது 70, ஆனால் உங்களை காணுகையில் 20 வயதுப்போல் உணர்ந்து புத்துணர்ச்சியடைகிறேன்"என்று கூறியுள்ளார். திராவிட மாடல் கட்சி கோடிக்கணக்கான மக்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இது குறித்து மக்கள் மத்தியில் பரப்புரையாற்றுங்கள் என்றும், உங்கள் முயற்சி பதவிக்காக இருக்க கூடாது, கொள்கை வளர்ச்சிக்காக இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பாஜக ஆட்சி முடிய போகிறது - மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து பேசிய அவர், நேற்று(ஜூலை.,28)மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தார். ஆனால் அவர் வந்தது புதிய நலத்திட்டங்களை துவக்கிவைப்பதற்காக இல்லை. ஏதோ பாத யாத்திரையினை துவங்கிவைக்க வந்துள்ளார். பாஜக தற்போது நடத்துவது பாதயாத்திரை அல்ல, கடந்த 2002ம்ஆண்டு நடந்த சம்பவத்திற்கும், இப்பொழுது மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கும் சம்பவத்திற்கும் மன்னிப்பு கோரும் பாவயாத்திரை என்று பகிரங்கமாக கூறியுள்ளார். மேலும், ராஜபக்சேவை 2014ல் பதவியேற்பு விழாவிற்கு அழைத்த இவர்கள் இலங்கை பிரச்சனை குறித்து பேச உரிமை இருக்கிறதா?என்றும் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார். தொடர்ந்து, பாஜக தங்களுடைய அரசியல் எதிரிகளை சலவைச்செய்யும் வாஷிங் மெஷினாக அமலாக்கத்துறையினை பயன்படுத்துகிறார்கள் என்றும், பாஜக ஆட்சி முடிய போகிறது, மத்திய அரசின் ஆட்டம் எல்லாம் இன்னும் சிலமாதங்கள் வரைத்தான் என்றும் தெரிவித்துள்ளார்.