யமுனை நீர்மட்டம் கடும் உயர்வு: டெல்லி முதல்வரின் வீடு வரை வெள்ளம்
டெல்லி உள்ள யமுனை ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளதால், வீடுகள் மற்றும் சாலைகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. ஹரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து தொடர்ந்து யமுனை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் யமுனையின் நீர்மட்டம் கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று 207.38 மீட்டராக இருந்த யமுனையின் நீர்மட்டம் தற்போது 208.46 மீட்டராக உயர்ந்துள்ளது. தற்போதைய நீர்மட்டம் அபாயக் குறியை விட மூன்று மீட்டர் உயரத்தில் உள்ளது. தடுப்பணையில் இருந்து திறந்துவிடக்கூடிய தண்ணீரைத் தடுக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வலியுறுத்தியது. ஆனால், அணையில் இருந்து உபரி நீரை திறந்து விடாமல் இருக்க முடியாது என்று மத்திய அரசு அதற்கு பதிலளித்துள்ளது.
இன்று பிற்பகல் 2 மணி முதல் நீர் வரத்து குறையும்
வட இந்தியாவில் தொடர்ந்து 5வது நாளாக பெய்து வரும் கனமழையால் தடுப்பணைகளிலும், ஆறுகளிலும் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால், டெல்லியின் மஜ்னு கா திலாவை காஷ்மீரி கேட் ஐஎஸ்பிடியுடன் இணைக்கும் பகுதி வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு 500 மீட்டர் தொலைவில் தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடும் டெல்லி சட்டசபையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், வசிராபாத் நீர் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த இடத்தை முதல்வர் கெஜ்ரிவால் இன்று பார்வையிட இருக்கிறார். இந்த அதீத வெள்ளத்தால் பழைய டெல்லி அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஹரியானா அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் இன்று பிற்பகல் 2 மணி முதல் குறையத் தொடங்கும் என மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.