
சென்னை போலீசாரால் துன்புறுத்தப்பட்டதாக வைரலான ஸ்டார்ட்-அப் நிறுவனரின் X பதிவு; என்ன நடந்தது?
செய்தி முன்னோட்டம்
சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனரான பிரசன்னா சங்கர், தனது டைவர்ஸ் செய்த தனது முன்னாள் மனைவியாலும், சென்னை காவல்துறையாலும் துன்புறுத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை X (முன்னர் ட்விட்டர்) இல் தொடர்ச்சியான பதிவுகளில், தன்னுடைய தரப்பு கதையை அவர் கூறுகையில் அவர் சென்னை சட்ட அமலாக்கத்திலிருந்து தப்பித்து தலைமறைவாக வாழ்வதாகவும் கூறியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவரது பதிவுகள் 8.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன.
இந்த விவகாரத்தில் இது வரை என்ன நடந்தது என நாம் அறிந்தவை இதோ உங்களுக்கு!
விவாகரத்து
தவறான புகார்கள் மற்றும் காவல்துறை துன்புறுத்தல்
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட கிரிப்டோ சமூக வலைப்பின்னல் 0xPPL.com இன் நிறுவனர் பிரசன்னா சங்கர், தனது மனைவியின் கள்ளத்தொடர்பைக் கண்டுபிடித்த பிறகு பிரச்சனைகள் தொடங்கியதாக X இல் தன்னுடைய பதிவில் விவரித்தார்.
தனது மனைவியின் துரோகத்திற்கான ஆதாரங்களைக் கண்டறிந்த பிறகு, அவர் விவாகரத்தினை நாடியதாக கூறினார்.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த போது, தன் மீது குடும்ப வன்முறை என பொய் குற்றம் சாட்டி, புகார் அளித்ததாக பிரசன்னா அந்த பதிவில் கூறினார்.
மேலும், விவாகரத்து கோரி இந்தியாவில் தான் வழக்குத் தொடர்ந்த நிலையில், சுய ஆதாயத்திற்காக மனைவி அமெரிக்காவில் மனு தாக்கல் செய்ய முயற்சித்ததாகவும் அவர் கூறினார்.
தீர்ப்பு
பிரசன்னாவிற்கு சாதகமான அமெரிக்கா நீதிமன்றத்தின் தீர்ப்பு
தனது மனைவி தனது ஒன்பது வயது மகனை அமெரிக்காவிற்கு "கடத்திச் சென்றதாக" பிரசன்னா குற்றம் சாட்டினார்.
இது சர்வதேச குழந்தை கடத்தல் வழக்கைத் தாக்கல் செய்யத் தூண்டியது.
அமெரிக்க நீதிமன்றம் தனக்கு சாதகமாக தீர்ப்பளித்ததாகவும், இதன் விளைவாக இரு தரப்பினருக்கும் இடையே ஒரு MoU கையெழுத்தானதாகவும் அவர் கூறுகிறார்.
ஒப்பந்தத்தின்படி, அவர் தனது மனைவிக்கு மாதத்திற்கு சுமார் ரூ.9 கோடியே 4.3 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும், அதே நேரத்தில் அவர்களின் மகனின் கூட்டுப் பராமரிப்பையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இருப்பினும், பின்னர் தனது மனைவி ஒப்பந்தத்திற்கு இணங்க மறுத்துவிட்டதாகவும், குறிப்பாக தங்கள் குழந்தையின் பாஸ்போர்ட்டை பகிரப்பட்ட லாக்கரில் வைப்பது தொடர்பாகவும் மறுத்துவிட்டதாகவும் பிரசன்னா வலியுறுத்தினார், இது மேலும் சட்ட மோதல்களுக்கு வழிவகுத்தது.
சென்னை காவல்துறை
சென்னை காவல்துறையினர் மீது குற்றம் சாட்டும் பிரசன்னா
பிரசன்னா சங்கரின் கூற்றுப்படி, அவர்களின் ஒப்பந்தத்திற்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக நீதிமன்றத் தலையீட்டை அவர் வலியுறுத்தியபோது பதட்டங்கள் அதிகரித்தன.
பின்னர் அவரது மனைவி தனக்கு எதிராக கடத்தல் புகார் அளித்ததாகவும், இதன் விளைவாக இரவு நேரத்தில் போலீஸ் அதிகாரிகள் தனது ஹோட்டலுக்கு வந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தவறான புகாரின் பேரில் கைது செய்யப்படுவார்கள் என்ற பயத்தில், தனது மகனுடன் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
தனது மகன் பாதுகாப்பாக உள்ளான் என்பதற்கான ஆதாரங்களை காவல்துறையினரிடம் வழங்கியதாகவும், ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் பிரசன்னா வலியுறுத்தினார்.
இதுபோன்ற போதிலும், அதிகாரிகள் தன்னைத் தொடர்ந்து தேடி வருவதாகவும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீது அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் கூறினார்.
கைது நடவடிக்கை
நண்பரை கைது செய்ததாக கூறும் பிரசன்னா
பெங்களூருவில் உள்ள தனது நண்பர் கோகுலின் வீட்டில் வாரண்ட் இல்லாமல் சென்னை போலீசார் சோதனை நடத்தியதாகவும், பின்னர் அவரை சென்னையில் கைது செய்ததாகவும் பிரசன்னா குற்றம் சாட்டினார்.
மேலும், அவரது நடமாட்டத்தை போலீசார் சட்டவிரோதமாக கண்காணித்து வருவதாகவும், அவர் முன்பு தங்கியிருந்த Airbnb நிறுவனத்தையும் சோதனை செய்ததாகவும் அவர் கூறினார்.
சென்னை காவல்துறையினர் தனது நண்பரை மிரட்டியதாகவும், அவரது சமூக ஊடகக் கூற்றுகளை இழிவுபடுத்தும் ஆவணங்களில் கையெழுத்திடுமாறு வற்புறுத்தியதாகவும் பிரசன்னா கூறினார்.
இந்த வழக்கிலிருந்து விடுவிக்க திருமங்கலம் காவல்நிலைய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் அவர் முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
எதிர் குற்றச்சாட்டு
மனைவி திவ்யாவின் எதிர் குற்றச்சாட்டுகள் என்ன?
பிரசன்னாவை பிரிந்த மனைவி திவ்யா, பிரசன்னாவின் கூற்றுக்களை மறுத்துள்ளார்.
மூன்று வாரங்களுக்கு முன்பு சங்கர் சொத்துப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறி தன்னை இந்தியாவிற்கு அழைத்துச் சென்றதாகவும், கோகுல கிருஷ்ணன் என்ற நபர் தனது மகனை தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
"என் மகனுக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை, அதனால்தான் நான் போலீசில் புகார் அளித்தேன்" என்றார்.
அதோடு, வரி ஏய்ப்பு செய்வதற்காக பிரசன்னா தங்கள் திருமண சொத்துக்களை அவரது தந்தையின் பெயருக்கு மாற்றியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
"இந்த வரி குற்றத்தைப் பற்றி நான் புகார் செய்யக்கூடாது என்று கூறி அவர்கள் மிரட்டி என் கையொப்பத்தைப் பெற்றனர்," என்று திவ்யா கூறினார்.
பாலியல் குற்றசாட்டு
பிரசன்னா மீது பாலியல் குற்றசாட்டு இருப்பதாகவும் திவ்யா கூறுகிறார்
அதோடு திவ்யா, பிரசன்னா சங்கரை பாலியல் குற்றவாளி என்றும் கூறியுள்ளார்.
அவர் பெண்களை ரகசியமாக பதிவு செய்ததாகவும், தானும் கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், சிங்கப்பூர் காவல்துறையினரால் பிரசன்னா கைது செய்யப்பட்டதாகவும், ஆனால் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் திவ்யா குற்றம் சாட்டினார்.
வற்புறுத்தல் மற்றும் விபச்சாரத்திற்காக பிரசன்னாவும் ஒரு ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கைது செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் தனது நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும், சென்னை காவல்துறையிடம் உதவி கோரியதாகவும் திவ்யா கூறினார்.
அதோடு தன்னுடைய மகனை பத்திரமாக மீட்டுத்தரவே சென்னை காவல்துறையினர் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.