மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்
இந்தியாவின் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் தேசியப்பயிற்சி முகாமில் உள்ள நடுவர்கள்,பயிற்சியாளர்கள் ஆகியோர் மல்யுத்தம் செய்யும் இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று டெல்லியில் பஜ்ரங்பூனியா, சாக்ஷிமாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் கடந்த ஜனவரி மாதம் தங்கள் போராட்டத்தினை துவங்கினர். அதன்பின்னர், பாஜக எம்.பி.பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது கடந்த ஏப்ரல் 28ம்தேதி டெல்லி காவல்துறை வழக்கு பதிவுச்செய்தது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது. இதனையடுத்து மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது இந்த பல்வேறு கட்டப்போராட்டங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வரும் 18ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்
பாஜக எம்.பி.பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பல்வேறு விதங்களில் போராடி வந்தனர். இதனிடையே, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள், கடந்த 8ம்தேதி மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர், பிரஜ் பூஷன் மீது நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்ததாக தெரிகிறது. இப்பேச்சுவார்த்தைக்கு பின்னரே மல்யுத்த வீரர்கள் தங்களது போராட்டத்தினை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக கூறினர். அதனையடுத்து பிரஜ்பூஷன் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையானது தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, பாலியல் தொந்தரவுக்கொடுத்த வழக்கில் பாஜக.,எம்.பி.யான பிரஜ் பூஷன் மற்றும் வினோத்குமார் ஆகியோர் வரும் ஜூலை 18ம் தேதி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சமமன் அனுப்பப்பட்டுள்ளது.