உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் இந்தியாவில் அமைப்பு - சி.என்.என். புகழாரம்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியிலிருந்து நாட்டின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் 300 கி.மீ., தொலைவில் நெடுஞ்சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சாலையில் குளிர்காலத்தின்பொழுது ஒரு பகுதி மூடப்படும் என்பதோடு, அடிக்கடி இந்த சாலையில் விபத்துகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் இருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு செல்ல ரயில்வே பாதை அமைக்க அரசு முடிவுசெய்தது. அதன்படி அப்பகுதியில் அமைந்துள்ள ஜீனப் நதியின் மேலே ரயில்வேப்பாலம் கட்ட முடிவுசெய்யப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த பாலம் அமைப்பது குறித்து செய்தியினை சி.என்.என்.பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜீனப் ஆற்றின் மேலே 359 மீட்டர் உயரத்தில்(1090 அடி உயரம்)இந்த ஜீனப் ரயில்வே பாலம் அமையவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
ஈபிள் டவரை விட 35 மீட்டர்கள் உயரம் கொண்ட ரயில்வே பாலம்
1,315மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தில் மணிக்கு 266கிமீ.,வேகத்தில் பலத்தக்காற்று வீசுவதையும்,நிலநடுக்கங்களையும் எதிர்கொள்ளும் வகையில் வலிமைமிக்கதாக உருவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைக்கப்படுவதன் மூலம் கத்ரா மற்றும் பனிஹால் பகுதிகளுக்கு இடையே உள்ள தொலைவினை கடக்க தற்போது 12மணிநேரம் ஆகும் நிலையில், இந்த நேரமானது பாதியாக குறையும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 2ஆண்டுகளில் இந்த பாலமானது கட்டி முடிக்கப்படும் என்று வடக்கு ரயில்வே பொது மேலாளர் அஷுதோஷ் கங்கால் இன்று கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள்டவரை விட 35 மீட்டர்கள் உயரத்தில் இந்த பாலம் அமையவுள்ளது. இந்தாண்டு டிசம்பர் அல்லது அடுத்தாண்டு ஜனவரியில் உலகின் உயரமான இந்த ரயில்வே பாலம் பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.