வாரணாசியில் துவங்கி அசாம் வரையிலான ஆற்றுவழி கப்பல் போக்குவரத்து - ஜனவரி 13ம் தேதி முதல் தொடக்கம்
உத்திரப்பிரேதேச மாநிலம் வாரணாசிக்கும், அசாம் மாநிலத்தின் திப்ரூகர் நகரம் வரை வங்கதேசம் வழியாக நீர்வழி வழித்தட போக்குவரத்து நடைபெறவுள்ளது என்று சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார். 4000 கி.மீ. தூரத்திற்கு நீளும் இந்த நீர்வழி பாதை போக்குவரத்தை இம்மாதம் 13ம் தேதி தான் துவக்கி வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி அவர்கள் இது குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "வாரணாசியில் இருந்து திப்ரூகர் நகரம் வரை அமையவுள்ள இந்த ஆற்றுவழி கப்பல் போக்குவரத்து, இந்திய சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதன் அடையாளமாக கருதப்படும். மேற்கு வங்க மக்கள் இந்த போக்குவரத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து கப்பல்கள் இயக்கப்படும்-இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதை அமைப்பு அறிவிப்பு
தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஆற்றுவழி பயணமானது இம்மாதம் 13ம் தேதி முதல் துவங்கவுள்ளது. இந்த நீர்வழி பாதையில் செல்லும் கப்பல் 50 சுற்றுலா தளங்களை அணுகி பயணிக்கவுள்ளது. வாரணாசி கங்கா ஆரத்தி, காசிரங்கா தேசிய பூங்கா, சுந்தரவன காடுகள் போன்ற இடங்களை இந்த நீர்வழி பாதை மூலம் பயணித்து பார்வையிடலாம்" என்று கூறினார். ஆறுகள் வழியே செல்லும் உலகின் மிக நீளமான நீர்வழி பாதையாக இது அமையவுள்ளது. கங்கை, பாகீரதி, ஹூக்ளி, பிரம்மபுத்ரா, மேற்கு கடற்கரை கால்வாய் வழியாக செல்லும் இந்த கப்பலில் 50 நாட்கள் பயணம் செய்யலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தனியார் நிறுவனம் இந்தப்பாதையில் தொடர்ந்து கப்பல்களை இயக்கும் என்று இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதை அமைப்பு தெரிவித்துள்ளது.