ஆண்களை விட பெண்கள் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்: ஆய்வில் தகவல்
பெரும் பதவிகளில் இருக்கும் பெண்களுக்கு ஆண்களை விட குறைவாக தான் சம்பளம் வழங்கப்படுகிறது என்று புதிய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 'தி கிராண்ட் வுமன் & வொர்க்ப்ளேஸ்' என்ற அறிக்கையை எட்டெக் பிளாட்ஃபார்மான upGrad வெளியிட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்பட ஆரம்பித்து நூறு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட, இன்னும் ஆண்களுக்கு நிகரான சம்பளம் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று இந்த அறிக்கை கூறுகிறது. பெரும் பதவிகளில் இருக்கும் பெண்களே இதில் பெரிதாக பாதிக்கப்படுகின்றனர். பெரும் பதவியில் இருக்கும் ஒரு ஆண் 100 ரூபாய் சம்பாதித்தால், அதே பதவியில் இருக்கும் ஒரு பெண் 74 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறார் என்கிறது இந்த அறிக்கை.
இந்த புதிய ஆய்வில் கிடைத்திருக்கும் தகவல்கள்
India Inc இல் வேலை செய்யும் 1,500 க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பணியிடத்தில் பெண்களை பாதிக்கும் பல்வேறு முக்கியமான பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. பெண் பணியாளர்கள் விற்பனையில் சிறந்து விளங்குபவர்களாக, அதிக வருவாயை ஈட்டி தருபவர்களாக இருந்தாலும், முதலீடு தொடர்பான முடிவுகள் அவர்களை நம்பி ஒப்படைக்கப்படுவதில்லை. இது போன்ற வேலைகள் 65% ஆண்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதே நேரம், 29% பெண்கள் மட்டுமே இது போன்ற முடிவுகளை எடுக்கும் பதவிகளில் இருக்கின்றனர். வேலையை பாதியிலேயே நிறுத்தும் பெண்களில் 58% பேர் குழந்தை வாளர்ப்புக்காக அதை செய்கின்றனர். ஆனால், இப்படி வேலையை பாதியிலேயே நிறுத்தும் ஆண்களில் 48% பேர் மேற்படிப்பிற்காக மட்டுமே அதை செய்கின்றனர்.