குடி போதையில் BMW காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய அரசியல்வாதியின் மகன்: ஒரு பெண் பலி
மும்பையின் வோர்லியில் இன்று அதிகாலை ஒரு பைக்கை BMW கார் மோதியதால் ஒரு பெண் உயிரிழநதார் மற்றும் அவரது கணவர் காயமடைந்தார். இந்த காரை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் தலைவர் ஒருவரின் மகன் மிஹிர் ஷா ஓட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த பிறகு 24 வயதுடைய மிஹிர் ஷா தலைமறைவாகியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள், வொர்லியின் கோலிவாடா பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். மீனவர்களான அவர்கள் மீன்களை வாங்கிக் கொண்டு சசூன் டாக்கில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, அதிகாலை 5:30 மணியளவில் அட்ரியா மால் அருகே ஒரு BMW கார் அவர்களை இடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
'இந்த வழக்கு பாரபட்சமின்றி விசாரிக்கப்படும்': முதல்வர் ஷிண்டே
அவர்கள் சென்ற பைக்கை ஒரு BMW கார் பின்னால் இருந்து வந்து மோதியதால் பலத்த காயம் அடைந்த அந்த மீனவரின் மனைவி காவேரி நகாவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். BMW கார் ஓட்டுநர் மிஹிர் ஷாவை கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக மும்பை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் நடந்தபோது மிஹிரின் டிரைவரும் அவருடன் காருக்குள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று கூறிய முதல்வர் ஷிண்டே, இந்த வழக்கு பாரபட்சமின்றி விசாரிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். "மும்பையில் நடந்த ஹிட் அண்ட் ரன் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. நான் காவல்துறையிடம் பேசினேன். சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள்" என்று முதல்வர் ஷிண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.