தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு
பெங்களூரை சேர்ந்த ஒரு பெண் தன் தாயின் உடலை சூட்கேஸில் அடைத்து, அந்த சூட்கேஸுடன் காவல்துறையில் சரணடைந்துள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் பெண் ஒருவர், நேற்று மதியம் 1 மணியளவில் ஒரு சூட்கேஸுடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். தென்கிழக்கு பெங்களூருவில் உள்ள மைக்கோ லேஅவுட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தன் தாயை கொன்றதாக அந்த பெண் தைரியமாக ஒப்புக்கொண்டதை கேட்ட போலீசார் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். உயிரிழந்தவரின் பெயர் பிவா பால்(70) என்பதும், குற்றம் சாட்டப்பட்ட மகளின் பெயர் செனாலி சென்(39) என்பதும் தெரியவந்துள்ளது.
தனது தாயின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொன்ற மகள்
செனாலி ஒரு பிசியோதெரபிஸ்ட் ஆவார். அவர் தனது தாய், மாமியார், கணவர் மற்றும் மனநிலை சரியில்லாத மகன் ஆகியோருடன் வசித்து வந்தார். முதற்கட்ட விசாரணையின் முடிவில், நேற்று செனாலி தனது தாயின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொன்றது தெரியவந்துள்ளது. அதற்கு பின்னர், தன் தாயின் உடலை ஒரு டிராலி சூட்கேஸில் அடைத்த செனாலி, அதை காவல்நிலையத்திற்கு எடுத்து சென்றார். அந்த சூட்கேஸிற்குள் அவரது தந்தையின் புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. பிவா பாலைக் கொல்வதற்கு முன் செனாலி அவருக்கு 15-20 மாத்திரைகள் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. தனது தாயும் மாமியாரும் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால் எரிச்சலடைந்த செனாலி, இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். செனாலி கூறியது உண்மையா என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.