LOADING...
WOH G64: வெடிக்க காத்திருக்கும் சூரியனை விட 1,500 மடங்கு பெரிய நட்சத்திரம்; பூமிக்கு ஆபத்தா?
வெடிக்க காத்திருக்கும் சூரியனை விட 1,500 மடங்கு பெரிய நட்சத்திரம், WOH G64

WOH G64: வெடிக்க காத்திருக்கும் சூரியனை விட 1,500 மடங்கு பெரிய நட்சத்திரம்; பூமிக்கு ஆபத்தா?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 25, 2026
07:08 pm

செய்தி முன்னோட்டம்

நமது பால்வீதி மண்டலத்திற்கு அருகில் உள்ள 'பெரிய மாகெல்லானிக் மேகம்' என்ற குள்ள விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ள நட்சத்திரம் WOH G64. 1970-களில் கண்டறியப்பட்ட இந்த நட்சத்திரம், சூரியனின் ரேடியசை விட 1,500 மடங்கு பெரியது. 2014-ஆம் ஆண்டு வரை 'Red Supergiant' என்று வகைப்படுத்தப்பட்டிருந்த இந்த நட்சத்திரம், தற்போது 'Yellow Hypergiant' நிலைக்கு மாறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு நட்சத்திரம் தனது இறுதிக்காலத்தை நெருங்கும்போது, அதன் வெளிப்புற அடுக்குகளை வேகமாக வெளியேற்றும். அந்த நேரத்தில் ஏற்படும் மாற்றமே இந்த நிலைக்கு காரணமாகும்.

ஆபத்து

சூப்பர்நோவா ஆபத்து

மிகப்பெரிய நட்சத்திரங்கள் மிகக் குறுகிய காலமே உயிர்வாழும். WOH G64 நட்சத்திரத்திற்கு வயது 50 லட்சம் ஆண்டுகளே ஆகிறது (நமது சூரியனுக்கு 460 கோடி ஆண்டுகள் ஆகிறது). இந்த நட்சத்திரத்தைச் சுற்றித் தூசுப் படலங்கள் உருவாகியிருப்பதை ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் (ESO) தொலைநோக்கிகள் படம் பிடித்துள்ளன. இது அந்த நட்சத்திரம் தனது நிறையை இழந்து வருவதை உறுதிப்படுத்துகிறது. இந்த மாற்றத்திற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்: 1. துணை நட்சத்திரம்: இதன் அருகில் உள்ள மற்றொரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையினால் ஏற்பட்ட அழுத்தம். 2. உள் அதிர்வுகள்: நட்சத்திரத்தின் கருவில் எரிபொருள் தீர்ந்து வருவதால் ஏற்படும் 'சூப்பர்விண்ட்' எனப்படும் அதிவேகக் காற்று வெளியேற்றம்.

பூமி

பூமிக்கு ஏதேனும் ஆபத்தா உண்டா?

முதலில் ஒரு நிம்மதியான செய்தி, இது வெடித்தால், பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை. WOH G64 நட்சத்திரம் பூமியில் இருந்து சுமார் 1,60,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. ஒரு சூப்பர்நோவா வெடிப்பு பூமியின் ஓசோன் படலத்தையோ அல்லது உயிரினங்களையோ நேரடியாக பாதிக்க வேண்டுமானால், அந்த நட்சத்திரம் சுமார் 50 முதல் 100 ஒளி ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். எனவே, இவ்வளவு தொலைவில் இருக்கும் WOH G64 வெடிப்பதால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த நட்சத்திரம் வெடிக்கும்போது, அது விண்வெளியில் நிகழும் ஒரு மிகப்பிரம்மாண்டமான வாணவேடிக்கை போலக் காட்சியளிக்கும். இந்த வெடிப்பு நிகழும்போது, சில வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு அந்த நட்சத்திரம் நிலவை போல அல்லது அதைவிட பிரகாசமாக விண்ணில் காட்சியளிக்கும்.

Advertisement