LOADING...
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: ஸ்டாலின் கையில் ரிமோட், எடப்பாடிக்கு வேலுமணி கொடுத்த செக் - விஜய் அரசு தப்புமா?
விஜய் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு ஒரு மிகப்பெரிய அக்னிப்பரிட்சையாக அமையவுள்ளது

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: ஸ்டாலின் கையில் ரிமோட், எடப்பாடிக்கு வேலுமணி கொடுத்த செக் - விஜய் அரசு தப்புமா?

எழுதியவர் Venkatalakshmi V
May 12, 2026
12:45 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 என்ற பெரும்பான்மை இலக்கை, 120 இடங்களுடன்(தவெக 107 + கூட்டணி 13) மிக நெருக்கமாகத் தொட்டு தற்போது பதவியேற்றுள்ள விஜய் அரசுக்கு, வரும் மே 13-ம் தேதி நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு ஒரு மிகப்பெரிய அக்னிப்பரிட்சையாக அமையவுள்ளது. விஜய்யின் ஆட்சி நீடிக்க வேண்டுமெனில் காங்கிரஸ்-5, இடதுசாரிகள்-4, விசிக-2 மற்றும் முஸ்லிம் லீக்-2 ஆகிய கட்சிகளின் ஆதரவு மிக அவசியம். இதில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் 'வெளியில் இருந்து ஆதரவு' மட்டுமே வழங்கியுள்ளன. இந்த கட்சிகள் இன்னும் திமுக தலைவர் ஸ்டாலினுடன் இணக்கமான உறவிலேயே இருப்பதால், விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்கும் 'ரிமோட் கண்ட்ரோல்' மறைமுகமாக ஸ்டாலின் கையிலேயே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அதிமுக

அதிமுக பிளவு: விஜய்க்கு கிடைத்த 'பேக்-அப்'

திமுக கூட்டணி கட்சிகள் ஒருவேளை ஆதரவை விலக்கினால், விஜய்க்கு கைகொடுக்க அதிமுக-வின் ஒரு பிரிவு தயாராகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தலைமைக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் சுமார் 30 எம்.எல்.ஏ-க்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். "திமுக-வுடன் எடப்பாடி பழனிசாமி ரகசியக் கூட்டணி வைக்க முயன்றதே எங்களின் இந்த முடிவுக்குக் காரணம்" என சி.வி. சண்முகம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தங்கள் ஆதரவு தமிழக வெற்றி கழகத்திற்கே எனவும் தெரிவித்துள்ளனர். இது விஜய்க்கு ஒரு வலுவான 'பேக்-அப்' திட்டமாக அமைந்துள்ளது.

வாக்கெடுப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு: சவால்களும் விதிகளும்

மே 13-ம் தேதி சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு அல்லது ரகசிய வாக்கெடுப்பு முறையில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டும். ஒருவேளை அன்றைய தினம் சில எம்.எல்.ஏ-க்கள் வராமல் போனால் (Absent), வருகை தந்தவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் ஆதரவு இருந்தால் மட்டுமே விஜய் முதலமைச்சராக நீடிக்க முடியும். சமநிலை (Tie) ஏற்படும் பட்சத்தில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தனது வாக்கைப் பயன்படுத்தலாம்.

Advertisement