நான் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை: ராகுல் காந்தி
லண்டனில் இந்திய ஜனநாயகத்தின் நிலை குறித்து கவலைகளை எழுப்பியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜக வலியுறுத்தி வரும் நிலையில், நான் இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை என்று ராகுல் காந்தி மறுத்துள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்களும், இங்கிலாந்தில் இந்தியாவை அவதூறாகப் பேசியதற்காகவும், இந்திய ஜனநாயகத்தின் சிதைந்த கட்டமைப்புகளை மீட்டெடுப்பதில் வெளிநாட்டு தலையீட்டை நாடியதற்காகவும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ராகுல் காந்தி கூறிய கருத்துக்களால் எழுந்த சர்ச்சையால் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து இரண்டு நாட்களாக தடைபட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து ராகுல் காந்தி NDTVக்கு பேட்டியளித்துள்ளார்.
மன்னிப்பு கேட்பீர்களா என்று கேட்டதற்கு அவர் சிரித்தார்: NDTV
வெளிநாட்டிற்கு சென்று தேசத்தை அவமதித்ததாக பாஜக, ராகுல் காந்தியின் மீது குற்றம்சாட்டியுள்ளது. இந்த கருத்துக்கு பதிலளித்த ராகுல் காந்தி, "அவர்கள் என்னை அனுமதிருந்தால் நான் நாடாளுமன்ற அவைக்குள் பேசி இருப்பேன்." என்று தெரிவித்திருக்கிறார். மேலும், "மன்னிப்பு கேட்பீர்களா என்று கேட்டதற்கு அவர் சிரித்தார்." என்று NDTV கூறியுள்ளது. பல மத்திய அமைச்சர்களும் ராகுல் காந்திக்கு எதிராக பேசி வரும் நிலையில், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, "இந்த நாட்டிலேயே அதிகமாக பேசுபவர் அவர் தான். இரவும் பகலும் அரசாங்கத்தை குறிவைத்து பேசி வருகிறார். ஆனால், வெளிநாட்டிற்கு சென்று இந்தியாவில் பேச சுதந்திரம் இல்லை என்கிறார்." என்று குற்றம்சாட்டியுள்ளார்.