ட்விட்டரை இந்திய அரசு மிரட்டியதாக குற்றச்சாட்டு
விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து பதிவிடும் கணக்குகளையும் அரசாங்கத்தை விமர்சிக்கும் கணக்குகளையும் முடக்க வேண்டும் என்று இந்திய அரசு மிரட்டியதாக ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி ஒரு அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த ஆண்டு ட்விட்டரில் இருந்து விலகிய ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி, ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியின் போது, வெளிநாட்டு அரசாங்கங்களிலிருந்து ஏதேனும் அழுத்தத்தை எதிர்கொண்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "எடுத்துக்காட்டாக இந்தியாவை எடுத்துக்கொள்வோம். விவசாயிகளின் போராட்டங்கள் நடக்கும் போது ட்விட்டரிடம் பல கோரிக்கைகளை முன்வைத்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அந்த சமயத்தில் அரசாங்கத்தை விமர்சிக்கும் சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்களுக்கு எதிராக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன." என்று கூறியுள்ளார்.
அரசாங்கத்தை விமர்சிக்கும் கணக்குகளை இந்திய அரசு முடக்க கோரியது: ட்விட்டர்
"அவர்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால், ' உங்கள் அலுவலகங்களை மூடுவோம்.' அல்லது 'உங்கள் ஊழியர்களின் வீடுகளை நாங்கள் சோதனை செய்வோம்' என்று கூறுவார்கள். ஏன், அதை செய்தும் காட்டினார்கள். இது தான் இந்தியா, ஒரு ஜனநாயக நாடு!" என்று அவர் மேலும் கூறியுள்ளார். 2020 நவம்பரில் இருந்து 2021 நவம்பர் வரை ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லையில் முகாமிட்டு ஒரு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து, ஒரு வருடமாக தொடர்ந்த விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்துவதற்காக நவம்பர் 2021ல், மூன்று சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களை பிரதமர் மோடியின் அரசு ரத்து செய்தது. இந்த விவசாய போராட்டத்தை பற்றி தான் ஜாக் டோர்சி பேசி இருக்கிறார்.