
'தி கேரளா ஸ்டோரி' விவகாரம்: தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
செய்தி முன்னோட்டம்
மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தடை செய்யப்பட்டதற்கான காரணத்தை உச்ச நீதிமன்றம் இன்று(மே 12) வினவியுள்ளது.
"மேற்கு வங்கம் ஏன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்? நாடு முழுவதும் இந்த படம் ஓடிக்கொண்டு தானே இருக்கிறது" என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், மேற்கு வங்கத்திற்கும் தமிழகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக அரசு இப்படத்திற்கு தடை விதிக்கவில்லை. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்காக திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை திரையிட வேண்டாம் என முடிவு செய்துள்ளனர்.
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் "அமைதியை சீர்குலைக்கும்" என்று கூறி மேற்கு வங்க அரசு இந்த படத்திற்கு தடை விதித்தது.
details
மேற்கு வங்க தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
"மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவும் வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்ப்பதற்காகவும் திரைப்படத்தின் திரையிடலைத் தடை செய்துள்ளோம்" என்று மேற்கு வங்க அரசாங்கம் திங்கள்கிழமை தெரிவித்திருந்தது.
மேற்கு வங்க தடையை எதிர்த்து, 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
32 ஆயிரம் கேரள பெண்கள், லவ் ஜிகாத்தின் மூலம் மதமாற்றம் செய்யப்பட்டு, தீவிரவாதத்தில் சேர்க்கப்பட்டதாக "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தின் கதை கூறுகிறது.
ஒரு மதத்தை பற்றி இந்த திரைப்படம் தவறாக பேசுவதாக கூறி, இதற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெரும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
ஆனால், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் இதற்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன.