காந்தி குடும்ப வழிபாடு காங். வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாக பிரணாப் ஏன் நம்பினார்?
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஸ்தா முகர்ஜி, "என் தந்தை பிரணாப்- மகளின் நினைவுகளில்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் பிரணாப் முகர்ஜி, ராகுல் காந்தி, நேரு மற்றும் காங்கிரசை பற்றி தன்னிடம் கூறியதாக சர்மிஸ்தா எழுதியுள்ள பல்வேறு கருத்துக்கள், அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இது குறித்து அவர் பேசியுள்ளார். டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சர்மிஸ்தா, காங்கிரஸை உருவாக்குவதில் நேரு-காந்தி குடும்பத்தின் பங்கு, காந்தி குடும்ப வழிபாடு காங்கிரஸின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என, பிரணாப் நினைத்தது உள்ளிட்டவற்றை குறித்து பகிர்ந்துகொண்டார்.
காங்கிரசிற்குள் எழுந்த எதிர்ப்பு குரலை போதுமான அளவிற்கு பிரணாப் ஆதரிக்கவில்லை
"நேரு-காந்தி குடும்பத்தைத் தவிர வேறு யாராலும் கட்சியை வழிநடத்த முடியாது என்ற நம்பிக்கையே கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று பிரணாப் முகர்ஜியின் டைரிகளில் குறிப்பிடப்பட்டிருந்ததாக" சர்மிஸ்தா தெரிவித்தார். இதுகுறித்து மேலும் விவரித்த சர்மிஸ்தா, "நேரு-காந்தி குடும்பத்தின் மீதான அவரது விசுவாசத்தை அவரது தந்தை கேள்விக்குள்ளாக்கினார். ஏனெனில் அவர் காங்கிரசுக்குள் எழுந்த எதிர்ப்பு குரலை போதுமான அளவு ஆதரிக்கவில்லை என்று தன்னைக் குற்றம் சாட்டியதாக" கூறினார். "காங்கிரஸ்காரராக இருந்த அவர், காங்கிரஸின் பேரழிவுகரமான வீழ்ச்சியால் (2014 முதல் கட்சியின் சரிவை குறிப்பிட்டு) தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் கலக்கமடைந்தார். அவரால் அதைக் புரிந்து கொள்ள முடியவில்லை," என பிரணாப் முகர்ஜியின் மகள் பேசினார்.
காங்கிரஸின் நிலை குறித்து இறுதி காலத்தில் வருந்திய பிரணாப்
காங்கிரஸின் நிலை குறித்து, தனது இறுதி காலகட்டத்தில் பிரணாப் முகர்ஜி மிகவும் கவலை பட்டதாக அவரது மகள் தெரிவித்துள்ளார். மேலும் தான் தன் புத்தகத்தில் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டிய சர்மிஸ்தா, காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு குரலுக்கு இடமில்லாமல் செய்வது, இந்திரா காந்தி காலத்தில் துவங்கியதாக தன் தந்தை தன்னிடம் சொன்னதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இந்திரா மற்றும் சோனியா காந்தி காலங்களில் கட்சியின் தலைவர்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படாததற்கும், கட்சியின் முழு செல்வாக்கு காந்தி குடும்பத்திடம் சென்றதற்கும், தனக்கும் தன்னை போன்றவர்களுக்கும் பொறுப்பு இருந்ததாக அவர் கருதினார் என அவரது மகள் தெரிவித்துள்ளார்.